புதிய கல்வி கொள்கையில் கருத்து தெரிவிக்க 6 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும்; தொடக்கப்பள்ளி ஆசிரிய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் பேட்டி
புதிய கல்வி கொள்கையில் கருத்து தெரிவிக்க 6 மாதம் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரிய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் அண்ணாமலை கூறினார்.
ஈரோடு,
தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சங்க வட்டார தலைவர் புனிதவதி தலைமை தாங்கினார். மாநகர தலைவர் ஞானசெல்வன், செயலாளர் தினேஷ்குமார், பொருளாளர் செல்விபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.
விழாவில் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரிய சங்கங்களின் கூட்டமைப்பு தேசிய செயலாளர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
புதிய கல்வி கொள்கை தொடர்பான அறிக்கையை மத்திய அரசு 484 பக்கங்களில் ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கல்வி கொள்கை சமூக நீதிக்கு எதிராக உள்ளது.
இந்திராகாந்தியின் ஆட்சி காலத்தில் 3 கல்வி கொள்கைகள் கொண்டு வரப்பட்டன. அவை கல்வியாளர்களை கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போதைய புதிய கல்வி கொள்கை என்பது விஞ்ஞானி ஒருவரால் தயாரிக்கப்பட்டு உள்ளது. 3 வயது குழந்தைக்கு 80 சதவீதம் பக்குவம் பெற்ற மூளை வளர்ச்சி இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். 3 மொழிகளை குழந்தைகள் ஏன் கற்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்புகிறார். தாய் மொழியில் கல்வி கற்பதுதான் முக்கியம். பிரதமர் நரேந்திரமோடி அனைத்து துறைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுவிட்டார். தற்போது கல்வி துறையும் அவருடைய கட்டுப்பாட்டில் செயல்பட தொடங்கிவிட்டது.
புதிய கல்வி கொள்கையை கடந்த ஜூன் மாதம் 1–ந் தேதி வெளியிட்டு 30–ந் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது. அதற்கு அவகாசம் கேட்டபோது ஜூலை 31–ந் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே புதிய கல்வி கொள்கையில் கருத்து தெரிவிக்க 6 மாதம் காலஅவகாசம் வழங்க வேண்டும்.
புதிய பாடப்புத்தகத்தில் தேசிய கீதத்திலேயே பிழை உள்ளது. மேலும், உலக செம்மொழியான தமிழ், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகவும், ஆனால் சமஸ்கிருதம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டதாகவும் தகவல் கூறப்பட்டு உள்ளது. இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.