தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், குட்டைகள் தூர்வாரப்பட வேண்டும் கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் பேட்டி
தமிழகம் முழுவதும் ஏரி, குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார வேண்டும் என கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி அளித்தார்.
திருவண்ணாமலை,
தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று திருவண்ணமலைக்கு வந்தார். இங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கள் ஒரு தடை செய்யப்பட வேண்டிய போதை பொருளோ, மதுவோ அல்ல. இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. மேலும் இது உலகளாவிய நடைமுறையும் ஆகும். மூன்றாண்டுகளுக்கு முன்பு பீகாரில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டபோது கள்ளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. கேரளாவில் முந்தைய ஆட்சியில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தியபோது கள் மீது அரசு கை வைக்கவில்லை. ஆனால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் மட்டுமே கள்ளுக்கு தடை உள்ளது.
வேலூர் தொகுதியில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களோ அல்லது இவர்களுக்கு வாக்குகேட்டு வரும் தலைவர்களோ கள் இயக்கத்துடன் வாதிட்டு, கள்ளும் ஒரு தடை செய்ய வேண்டிய போதை பொருள்தான் என நிரூபித்துவிட்டால், ரூ.10 கோடி பரிசை கள் இயக்கம் கொடுக்கும். கள் இயக்கமும் கலைக்கப்படும்.
தமிழகத்தில் குடிமராமத்து பணிகளுக்காக அரசு ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்குகிறது. பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்தி குடிமராமரித்து பணிகளை செய்கிறார்கள். குடிமராமத்து பணிகளுக்கு மனித உழைப்பை பயன்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட வேண்டும். இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நிலத்தடி நீரை தொடர்ந்து உறிஞ்சினால் தமிழ்நாடு பாலைவனமாக மாறும்.
வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுகிறதோ அதேபோல நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story