பட்டுக்கோட்டை அருகே பொதுமக்களோடு சேர்ந்து குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட தஞ்சை கலெக்டர்


பட்டுக்கோட்டை அருகே பொதுமக்களோடு சேர்ந்து குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட தஞ்சை கலெக்டர்
x
தினத்தந்தி 28 July 2019 4:15 AM IST (Updated: 28 July 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே பொதுமக்களோடு சேர்ந்து குளம் தூர்வாரும் பணியில் கலெக்டர் அண்ணாதுரை ஈடுபட்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா புதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கோலிகுளத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பணியை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கோலிகுளத்தின் கரை மற்றும் உயரம் அளவிடும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பட்டுக்கோட்டை தாலுகா ஆலடிக்குமுளை கிராமம் தாமரைக்குளம் வடக்குத்தெருவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டு பட்டாக்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டார்.

களத்தில் இறங்கிய கலெக்டர்

அலிவலம் கிராமத்தில் நாயக்கன்குளத்தில் நடைபெற்று வரும் தூர்வாருதல் பணியை பார்வையிட்ட கலெக்டர் பொதுமக்களோடு தானும் களத்தில் இறங்கி தூர்வாரும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் குளத்தில் இருந்து அள்ளப்படும் மண்ணை அங்கிருந்தவர்களோடு சேர்ந்து வாங்கி கொட்டும் பணியில் ஈடுபட்டார். கலெக்டரும் தூர்வாரும் பணியில் ஈடுபட்டதை பார்த்த பொதுமக்கள் அவருடைய செயலை பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்

அதைத்தொடர்ந்து கலெக்டர் பேராவூரணியை அடுத்த ஒட்டங்காடு பெரியகுளம் ஏரி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தனியார் அமைப்புகள் மூலம் தூர்வாரப்படுவதை பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்ட போது அவர்களிடம், கலெக்டர் நீரை சேமிப்பதன் அவசியம், சிக்கனமாக பயன்படுத்துவதன் அவசியம், மழைநீரை சேமிப்பதன் அவசியம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்.

பாராட்டு

அதைத்தொடர்ந்து பேராவூரணி பெரியகுளம் கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பாக தன்னார்வலர்கள் மூலம் நிதி பெற்று தூர்வாரப்படுவதை பார்வையிட்டு சங்க உறுப்பினர்களுக்கு பாராட்டினை கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story