உடுமலை அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டெடுப்பு


உடுமலை அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 28 July 2019 4:45 AM IST (Updated: 28 July 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

போடிபட்டி,

‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடி’ என்று பெருமைப்படுத்தப்படுவது தமிழ் இனம் ஆகும். அத்தகைய பண்டை தமிழர்களின் வாழ்வியல் சான்றுகளை வெளிப்படுத்துவதில் கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் முக்கிய பங்குவகிக்கின்றன.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலும் நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய நடுகற்கள் வீரன் கல், வீரக்கல், நடுகல் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவை போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரர்களின் வீரத்தைப்போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடுகற்கள் வெறும் அடையாளங்களாக மட்டும் இல்லாமல் இறந்த வீரனுக்கு நன்றி பாராட்டும் விதமாகவும், அவனை நினைவு கூறும் விதமாகவும், அந்த வீரனுக்கான வெகுமதியாகவும் நடப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

போரில் இறந்த வீரர்களுக்கு மட்டுமின்றி தாங்கள் வளர்த்த கால்நடைகளை காட்டு விலங்குகளிடமிருந்து காப்பாற்றும் விதமாக போரிட்டு உயிரிழந்த வீரர்களுக்கும், தங்கள் விளைநிலங்களை காக்க போரிட்டு உயிர் நீத்த வீரர்களுக்கும் நடுகல் நட்டு வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. இத்தகைய நடுகற்களின் காலம், இறந்த வீரன் குறித்த விபரங்களை வெளிக்கொண்டு வருவதில் வரலாற்று ஆய்வாளர்களின் பங்கு பெருமளவில் உள்ளது.

அந்தவகையில் மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர் உதயகுமார் மடத்துக்குளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது காரத்தொழுவு சுங்கம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பழமையான மூன்று நடுகற்களை மக்கள் தெய்வங்களாக போற்றி வழிபடுவதை கண்டறிந்தார். இந்த நடுகற்கள் குறித்து வரலாற்று ஆய்வாளர் உதயகுமார் கூறியதாவது:-

காரத்தொழுவு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவை 16 மற்றும் 17-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படுகிறது. அதில் ஒரு நடுகல்லில் வீரன் வில்லில் அம்பை பூட்டி எய்வது போலவும் அவனது துணைவி அம்புப்பெட்டியிலிருந்து அம்பை எடுத்துக்கொடுப்பது போலவும் சிற்பம் அமைந்துள்ளது. இந்த நடுகல்லை பேச்சிக்கல் என இப்பகுதி மக்கள் அழைத்து வழிபடுகின்றனர். மேலும் சுமார் 3 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட மற்றொரு நடுகல்லில் நின்ற நிலையில் உள்ள வீரன் தனது சண்டையிடும் வாளுடனும், இடுப்பில் குறுவாளுடனும் காட்டப்பட்டுள்ளான். இந்த நடுகல்லை இப்பகுதி மக்கள் வீரபத்திரசாமி என்று வணங்கி வருகின்றனர்.

இதேபோல மற்றொரு நடுகல் சுமார் 2 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதில் வீரன் தனது சண்டையிடும் வாளை தரையில் ஊன்றியபடி இடது கையில் துப்பாக்கி போன்ற ஆயுதத்தை ஏந்தியபடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். இந்த நடுகல்லை இப்பகுதி மக்கள் இருளப்பசாமி என்று வணங்கி வருகின்றனர். தங்கள் எல்லை பகுதியை காக்க எதிரிகளிடம் போராடி வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக இந்த நடுகற்கள் அமைக்கப்பட்டிருக்கக்கூடும். இந்த நடுகற்கள் 16 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளை சேர்ந்தவை என தொல்லியல் அறிஞர்கள் பேராசிரியர் ராஜகோபால், பேராசிரியர் சொக்கலிங்கம் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளிலுள்ள ஆவணப்படுத்தப்படாத வரலாற்றுத்தடயங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். பழமையான நம் வரலாற்று தடயங்களை பாதுகாப்பதில் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Next Story