தாராபுரம் ஒன்றியத்தில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு


தாராபுரம் ஒன்றியத்தில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 28 July 2019 4:30 AM IST (Updated: 28 July 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் ஒன்றியத்தில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்துதல் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தாராபுரம்,

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் மத்திய பொருளாதார இணை செயலாளர் குலாப்சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிரிதரன், உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.கே.ஜீவானந்தம், செந்தில்கணேஷ்மாலா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், சம்பத், ஜெயலட்சுமி உள்பட பலர் உடன் இருந்தனர்.

சங்கரண்டாம்பாளையம் பிர்காவிற்கு உட்பட்ட மாம்பாடி மற்றும் நாதம்பாளையம் ஆகிய பகுதிகளில், ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட, நீர்பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நீர் ஆதாரங்களை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகள், பயனற்ற ஆழ்குழாய் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு, நீர் வடி மேலண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்துதல் மற்றும் மரம் வளர்த்தலை ஊக்குவித்தல் ஆகிய பணிகளை மத்திய அதிகாரிகள் அரசின் ஆய்வு செய்தனர்.

இதுதவிர குமாரசாமி கோட்டை கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவரது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள, தனி நபர் இல்ல உறிஞ்சு குழிகள், மத்திய அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடு, மானியத்தில் வழங்கப்பட்ட எல்.ஈ.டி. விளக்குகள் உஜ்வால திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இலவச எரிவாயு இணைப்பு ஆகியவற்றை பார்வையிட்டனர்.

மேலும் மத்திய-மாநில அரசுகளின் தனிநபர் திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளை, அதிகாரிகள் நேரில் சந்தித்து, திட்டத்தின் செயல்பாடு மற்றும் பயன்பாடு ஆகியவை குறித்து கருத்துகளை கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும் அப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் பணியாளர்களை சந்தித்து கருத்து கேட்கப்பட்டதோடு, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இதுபோல் குண்டடம் அருகே சூரியநல்லூர் ஊராட்சி மற்றும் எல்லப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் குலாப் சிங் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர். இந்த குழுவினர் கான்கிரீட் செக்டேம் பணிகள், பண்ணைக்குட்டை பணிகள், தனிநபர் மற்றும் சமுதாய உறிஞ்சு குழி பணிகள், மரக்கன்று நடும் பணிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆலோசனைகளையும் வழங்கினர். இந்த ஆய்வின்போது காங்கேயம் உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள், அலுவலர்கள் உடனிருந்தனர். அத்துடன் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Next Story