‘டிக்-டாக்’ மூலம் அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொலை மிரட்டல்; கூலி தொழிலாளி கைது


‘டிக்-டாக்’ மூலம் அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொலை மிரட்டல்; கூலி தொழிலாளி கைது
x
தினத்தந்தி 27 July 2019 11:45 PM GMT (Updated: 27 July 2019 7:48 PM GMT)

‘டிக்-டாக்’ மூலம் அமைச்சர் கமலக்கண்ணனை கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறுபேட் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சங்கர் குரு (வயது 31) கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு திருநள்ளாறு சாலையில் உள்ள பஸ்நிறுத்தம் ஒன்றில், நண்பர்கள் சிலருடன் காரசாரமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் சிலர் அவர் பேசுவதை செல்போனில் ‘டிக்-டாக்’ செயலி மூலம் வீடியோ படம் பிடித்தனர். அமைச்சரும் திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கமலக்கண்ணனை பற்றி அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சங்கர் குரு, அமைச்சர் கமலக்கண்ணனை ஒருமையிலும், ஆபாசமாக பேசி, ஆபாச சைகை செய்து, கொலைமிரட்டல் விடுத்து பேசியுள்ளார். அதனை செல்போனில் வீடியோ படம் பிடித்த நண்பர்கள் வாட்ஸ்-அப்பில் பரப்பினர்.

இந்த வீடியோ காரைக்கால் மாவட்டம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பரவியது. இதுபற்றி அறிந்ததும் காங்கிரஸ் கட்சியினர் ஆத்திரம் அடைந்தனர்.

இதுகுறித்து திருநள்ளாறு தொகுதி காங்கிரஸ் செயலாளர் சிவக்குமார், போலீசில் வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் விசாரித்தனர். விசாரணையைத் தொடர்ந்து சங்கர்குரு மற்றும் அவரது நண்பர்கள் அஜித் (22), கண்ணன் (26) ஆகியோர் மீது, தனிநபரை ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல், வலைதளத்தில் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட குற்றப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், சங்கர்குருவை போலீசார் கைது செய்தனர். அவருடைய நண்பர்கள் அஜித், கண்ணன் ஆகிய இருவரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story