ஆலங்குளம் அருகே விபத்து: 2 கல்லூரி மாணவர்கள் பலி மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியது


ஆலங்குளம் அருகே விபத்து: 2 கல்லூரி மாணவர்கள் பலி மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியது
x
தினத்தந்தி 28 July 2019 3:45 AM IST (Updated: 28 July 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஆலங்குளம்,

நெல்லை அருகே உள்ள வி.எம்.சத்திரத்தை சேர்ந்தவர் அப்பாத்துரை மகன் அலெக்ஸ் (வயது 19). புதுக்குளத்தை சேர்ந்தவர் சிவபெருமாள் மகன் வினோத் (19). இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர்.

இந்த நிலையில் அலெக்ஸ், வினோத் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் குற்றாலத்துக்கு குளிக்க சென்றனர். அங்கு அருவியில் குளித்து விட்டு நேற்று அதிகாலை அதே மோட்டார் சைக்கிளில் தங்கள் ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை அலெக்ஸ் ஓட்டினார்.

ஆலங்குளத்தை அடுத்த மாறாந்தை அருகே வந்தபோது, தூத்துக்குடியில் இருந்து குற்றாலம் நோக்கி சென்ற வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் பண்டாரகுளத்தை சேர்ந்த ஜெபதுரையை கைது செய்தனர். மேல்விசாரணை நடந்து வருகிறது.

Next Story