மானாமதுரை அருகே ஐம்பொன் சிலைகளை திருடிய 3 பேர் கைது


மானாமதுரை அருகே ஐம்பொன் சிலைகளை திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 July 2019 4:45 AM IST (Updated: 28 July 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே இடைக்காட்டூர் பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள கரியமாணிக்கம் பெருமாள் கோவிலில் கடந்த மாதம் 19-ந் தேதி பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 ஐம்பொன் சிலைகள் மற்றும் சிலையின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கசங்கிலியும் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐம்பொன் சிலைகளை திருடிச்சென்றவர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கோவில் வாசலில் திருட்டுபோன சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் சிலை கழுத்தில் கிடந்த நகை மட்டும் இல்லை.

சிலைகள் மீண்டும் கோவில் வாசலில் கிடந்ததை அடுத்து இடைகாட்டூர் பகுதியில் சிறப்பு தனிப்படை இன்ஸ்பெக்டர்கள் சரவண போஸ், நாகராஜன், முகமது பக்குருதீன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அந்த கிராமத்தை சேர்ந்த தெய்வமணி(வயது 22), சுந்தரவேல்(25), முத்தரசன் கிராமத்தைச் சேர்ந்த அழகு சுப்பிரமணி(35) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் திருட்டில் ஈடுபட்ட தினேஷ், பொன்னுப்பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story