மதுரை அருகே இருவேறு விபத்துகள்: என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 4 பேர் பலி, 12 பேர் படுகாயம்


மதுரை அருகே இருவேறு விபத்துகள்: என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 4 பேர் பலி, 12 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 28 July 2019 4:15 AM IST (Updated: 28 July 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 2 என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை,

சென்னை கோசாபேட் செல்லப்பா தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 53). இவர் சொந்த வேலை காரணமாக சென்னையில் இருந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு புறப்பட்டுள்ளார். ஆம்னி பஸ் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்து, இங்கிருந்து வாடகை கார் மூலம் விருதுநகர் வழியாக சிவகாசி சென்றார். சிவகாசியில் வேலை முடிந்து நேற்று அதிகாலையில் அதே கார் மூலம் மதுரை நோக்கி வந்துகொண்டு இருந்தார்.

திருமங்கலம் மறவன்குளம் அருகே வந்த போது, அந்த காரின் டயர் திடீரென வெடித்தது. இதையடுத்து நிலைதடுமாறிய கார் சாலை தடுப்பை தாண்டி சேலத்தில் இருந்து தென்காசியை நோக்கி வந்த வேன் மீது பயங்கரமாக மோதியது.

இதில் காரில் வந்த அண்ணாமலை, மதுரை இரும்பாடியைச் சேர்ந்த கார் டிரைவர் நாகேந்திரன்(26) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

வேனில் வந்த சேலத்தை சேர்ந்த ராம்குமார், முருகேசன், சேகர் உள்பட 12 பேர் படுகாயங்களுடன் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான 2 பேரின் உடல்கள் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதே போல் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே காரும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜஸ்வந்த் (19), சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜேஷ்வர் (19). இவர்கள் 2 பேரும் உறவினர்கள் ஆவர். இவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் விடுதியில் தங்கி என்ஜினீயரிங் படித்து வந்தனர்.

நேற்று காலையில் இவர்களும், இவர்களுடைய நண்பர்களும் மோட்டார் சைக்கிள்களில் மதுரைக்கு வந்து சினிமா பார்த்துவிட்டு, திரும்பவும் விடுதிக்கு புறப்பட்டனர். ஒரு மோட்டார் சைக்கிளில் ஜஸ்வந்தும், தேஜேஷ்வரும் பயணித்தனர். அவர்கள் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள குன்னத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு வளைவில் திரும்பிய போது, எதிரே மதுரை நோக்கி ஒரு கார் வந்தது.

எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், அந்த காரும் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் டி.கல்லுப்பட்டி போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன. உடன் வந்த 2 பேர் விபத்தில் பலியானதை கண்டு, அவர்களுடைய நண்பர்கள் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story