தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் சார்பில் ஒரே மாதத்தில் 2 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு துணைத்தலைவர் முருகன் பேட்டி
தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் சார்பில் ஒரே மாதத்தில் வன்கொடுமை தொடர்பான 2 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இருப்பதாக அதன் துணைத்தலைவர் முருகன் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் சுகாதாரமற்ற தொழில் செய்வோருக்கான சட்டங்களை கடைபிடிப்பது குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத்தலைவர் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீருதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலைகள் உள்பட ரூ.37 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி, உதவி கலெக்டர் மணிராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மரகதவள்ளி, துணை கலெக்ட (பயிற்சி) பிரேமலதா, மாவட்ட கல்வி அலுவலர் (நாமக்கல்) உதயக்குமார் உள்பட அனைத்து அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத்தலைவர் முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் சார்பில் கூட்டு பாலியல் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் விளைவாக மாநிலம் வாரியாக மக்கள் நீதிமன்றம் போல நடத்தப்பட்ட முகாமில் ஒரே மாதத்தில் 2 ஆயிரம் வன்கொடுமை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
பொதுவாக வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முதல் 2 கட்ட நிவாரண தொகை வழங்கப்பட்டு விடுகிறது. ஆனால் அரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கூடுதல் நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த கூடுதல் நிவாரணம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு சிறப்பானதொரு அரசாணையை வெளியிட்டு உள்ளது. இதனை அரியானா போன்ற மாநிலம் பின்பற்றி வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கூடுதல் இழப்பீடாக அரசு வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை போன்றவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை ஆணவக்கொலை தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 5 வழக்குகளை ஆணையம் சந்தித்து உள்ளது. அதே நேரத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழும் தம்பதிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மாவட்டம் தோறும் 150 முதல் 200 கலப்பு திருமணங்கள் நடைபெற்று, எவ்வித பிரச்சினையும் இன்றி அந்த தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைந்து உள்ளது. போக்சோ சட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் மத்திய அரசு தடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story