மதிப்பு கூட்டு எந்திர மையங்கள் அமைக்க ரூ.10 லட்சம் மானியம் கலெக்டர் தகவல்
மதிப்பு கூட்டு எந்திர மையங்கள் அமைக்க ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியை பெருக்கும் வகையில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மைக்கான இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இ்த்திட்டத்தின் கீழ் மானாவாரி தொகுப்புகளில் உள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அந்தந்த தொகுதிகளில் உள்ள பயிர்களுக்கான விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் வகையிலான மதிப்பு கூட்டும் எந்திரங்கள் மையம் அமைத்திட மானியம் வழங்கப்பட உள்ளது.
வேளாண் விளைபொருட்களை சுத்தப்படுத்தி, தரம் பிரித்து விற்பனைக்கேற்ற வகையில் ‘பேக்கிங்’ செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான மதிப்புக் கூட்டும் எந்திரங்கள் வாங்குவதற்கும் மற்றும் அதற்குரிய பணி மூலதனம் ஆகியவை உள்ளிட்ட மொத்த தொகையில் 75 சதவீதம் அல்லது ரூ.10 லட்சம், இதில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படும். மீதி 25 சதவீத தொகையை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்திக்குழு செலுத்த வேண்டும்.
மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்பில் உள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு சேர்ந்து பெரிய அளவிலான மதிப்புக் கூட்டும் எந்திர மையங்கள் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையிலும் அமைக்க அனுமதிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் மதிப்புக்கூட்டும் எந்திரங்களை வேளாண் பொறியியல் துறையின் மூலம் விலை நிர்ணயம் செய்து, அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து எந்திரங்கள் வாங்கப்பட வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் மதிப்புக் கூட்டு எந்திரங்கள் அமைக்கப்பட்டு, மரச்செக்குகள் உள்ளிட்ட பல்வேறு எந்திரங்கள் வாங்கப்பட்டு லாபகரமான முறையில் இயங்கி வருவதால் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு இந்த மையங்களை அணுகி மதிப்புக்கூட்டப்பட்ட விளைபொருட்களை பெற்று கொள்ளலாம்.
இதேபோன்று நடப்பு நிதியாண்டிலும் (2018-19) இரண்டாம் கட்டமாக 150 மதிப்புக் கூட்டு எந்திர மையங்களை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதித்து உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 6 மதிப்புக் கூட்டு எந்திர மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 2 மதிப்புக் கூட்டு எந்திர மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் வரவேற்கப்படுகின்றன.
மதிப்புக் கூட்டும் எந்திர மையம் அமைப்பதற்கு ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுவினை தேர்வு செய்து சம்பந்தப்பட்ட மானாவாரி தொகுப்பு மேம்பாட்டுக் குழுவிற்கு வழங்க வேண்டும். தொகுப்பு மேம்பாட்டுக் குழு, விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வேளாண் பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு தங்கள் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட தொகுப்பு மேம்பாட்டுக் குழுவிற்கு அளித்திடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story