கோவில்பட்டியில் பரபரப்பு மர்மப்பொருள் வெடித்து வாலிபர் படுகாயம் போலீசார் விசாரணை


கோவில்பட்டியில் பரபரப்பு  மர்மப்பொருள் வெடித்து வாலிபர் படுகாயம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 28 July 2019 4:15 AM IST (Updated: 28 July 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் குப்பையை சுத்தம் செய்தபோது, மர்மப்பொருள் வெடித்து வாலிபர் படுகாயம் அடைந்தார்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துநகர் ஜான் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. மைக்செட் உரிமையாளர். இவருடைய மகன் கணேஷ் நவீன் (வயது 28). இவர் தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து மைக்செட் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். கணேஷ் நவீனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. எனவே அவர் நேற்று காலையில் தனது வீட்டின் முன்புள்ள காலி இடத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது குப்பையில் கிடந்த மர்மப்பொருள் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் கணேஷ் நவீனின் முகம், மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அலறி துடித்தார். மர்மப்பொருள் வெடித்து சிதறியதில், கணேஷ் நவீனின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின.

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, படுகாயம் அடைந்த கணேஷ் நவீனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வெடிவிபத்து குறித்து அறிந்ததும், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மர்மப்பொருள் வெடித்த இடத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் ஆதி, சுகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அங்குள்ள தடயங்களை தடயவியல் நிபுணர் கலா லட்சுமி சேகரித்தார். மேலும் மர்மப்பொருள் வெடித்த இடத்தில் மோப்ப நாய் வியா, அந்த காலி இடத்தைச் சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குப்பையில் மர்மநபர்கள் பதுக்கி வைத்து இருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதா? அல்லது குப்பையில் கொட்டப்பட்ட தீக்குச்சி கழிவுகள் வெடித்து சிதறியதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குப்பையை சுத்தம் செய்தபோது, மர்மப்பொருள் வெடித்து வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story