திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு பயிற்சியில் சேர்ப்பதற்கான தகுதி தேர்வு


திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு பயிற்சியில் சேர்ப்பதற்கான தகுதி தேர்வு
x
தினத்தந்தி 27 July 2019 10:45 PM GMT (Updated: 27 July 2019 8:25 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு பயிற்சியில் சேர்ப்பதற்கான தகுதிதேர்வு நடந்தது.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் திருச்சி, லால்குடி, முசிறி, மணப்பாறை என 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. 4 கல்வி மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளை ஜே.இ.இ. பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான தகுதி தேர்வு நேற்று திருச்சி இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

லால்குடி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-1 படிக்கும் 56 மாணவர்கள், பிளஸ்-2 படிக்கும் 54 மாணவர்கள், திருச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-1 படிக்கும் 17 மாணவர்கள், பிளஸ்-2 படிக்கும் 29 மாணவர்கள், முசிறி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-1 படிக்கும் 49 மாண வர்கள், பிளஸ்-2 படிக்கும் 47 மாணவர்கள், மணப்பாறை கல்வி மாவட்டத்தில் பிளஸ்-1 படிக்கும் 49 மாணவர்கள், பிளஸ்-2 படிக்கும் 41 மாணவர்கள் என மொத்தம் 342 மாணவ-மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்றனர்.

கலெக்டர் ஆய்வு

திருச்சி இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் தகுதித்தேர்வு எழுதியதை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நேரில் சென்று ஆய்வு செய்தார். எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன? என்பதை கேள்வித்தாளை மாணவர்களிடம் பெற்று பார்வையிட்டார்.

இதுகுறித்து கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவிக்கையில்,“திருச்சி மாவட்ட பள்ளி கல்வித்துறையும், தேசிய தொழில்நுட்பக் கழகமும் ஆண்டுக்கு 60 மாணவ-மாணவிகளை ஜே.இ.இ. பொறியியல் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி அளிக்க ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் அடிப்படையில், அப்பயிற்சிக்காக அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 342 மாணவ-மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்” என்றார்.

Next Story