சேலத்தில் மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்
சேலத்தில் மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மரவனேரியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பலர் நேற்று பள்ளி முன்பு திரண்டனர்.
பின்னர் அவர்கள் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி, கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சில மாணவர்கள் திடீரென மரவனேரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்களின் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கல்வி அதிகாரிகளிடம் பேசி விரைவில் மடிக்கணினி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும் போது, ‘மரவனேரி அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த (2018-19) கல்வி ஆண்டில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தோம். எங்களுக்கு இதுவரை மடிக்கணினி வழங்கவில்லை. இதனிடையே மாணவர்களுக்கு வழங்குவதற்காக மடிக் கணினி வந்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட போது சரியான பதில் அளிக்க வில்லை. இதனால் மடிக்கணினி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டோம்’ என்றனர்.
Related Tags :
Next Story