மாவட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு மருத்துவ முகாம் முதன்மை கல்வி அலுவலர் தகவல்
சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சேலம்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வியின் மூலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு மருத்துவ முகாம் 21 வட்டார வள மையங்களிலும் நடைபெறுகிறது. இந்த முகாமில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் தீவிர தன்மையின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை, ஆதார் அட்டை, பஸ் பாஸ் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 5-ந் தேதி இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. 8-ந் தேதி வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 9-ந் தேதி தீவட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.
14-ந் தேதி வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 16-ந் தேதி எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அயோத்தியாபட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 19-ந் தேதி மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 21-ந் தேதி மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
இதேபோல், 22-ந் தேதி கொங்கணாபுரம் கே.ஏ.என்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சேலம் நகர்புற அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 26-ந் தேதி மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தலைவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 28-ந் தேதி ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 29-ந் தேதி கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஓமலூர் பாத்திமா மேல்நிலைப்பள்ளியிலும், 30-ந் தேதி வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story