ராஜினாமா செய்த யாரும் சித்தராமையாவுடன் பேசவில்லை ; அதிருப்தி எம்.எல்.ஏ. எம்.டி.பி.நாகராஜ் பேட்டி


ராஜினாமா செய்த யாரும் சித்தராமையாவுடன் பேசவில்லை ; அதிருப்தி எம்.எல்.ஏ. எம்.டி.பி.நாகராஜ் பேட்டி
x
தினத்தந்தி 28 July 2019 5:00 AM IST (Updated: 28 July 2019 3:47 AM IST)
t-max-icont-min-icon

ராஜினாமா செய்த யாரும் சித்தராமையாவுடன் பேசவில்லை என்றும், குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.வான எம்.டி.பி.நாகராஜ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமட்டள்ளி மற்றும் சுயேச்சையாக இருந்து காங்கிரசில் சேர்ந்த ஆர்.சங்கர் ஆகிய 3 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளனர். இந்த நிலையில், ராஜினாமா செய்துள்ள 2 எம்.எல்.ஏ.க்கள் தன்னை தொடர்பு கொண்டதாகவும், அவர்களுடன் தான் பேசவில்லை என்றும் முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிருப்தி எம்.எல்.ஏ.வும் முன்னாள் மந்திரியுமான எம்.டி.பி.நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–

2 எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவை தொடர்பு கொண்டு பேச முயன்றதாக வரும் தகவல் உண்மை அல்ல. ராஜினாமா செய்துள்ள யாரும் சித்தராமையாவுடன் பேசவில்லை. எங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. அப்படி பேசி இருப்பதாக கூறினால், அந்த எம்.எல்.ஏ.க்களின் பெயர், செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும். ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்கு நேர்ந்த சில பிரச்சினைகளால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தோம். அந்த பிரச்சினை பற்றி சித்தராமையாவிடம் பலமுறை கூறியும், அவர் கண்டு கொள்ளவில்லை.

சித்தராமையாவிடம் மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக சொல்லிவிட்டு தான் வந்துள்ளேன். ராஜினாமா செய்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றி சித்தராமையாவுக்கு நன்கு தெரியும். எனது இதயத்தில் சித்தராமையா முதலில் இருந்தார். தற்போது அவர் என் இதயத்தில் இல்லை. என் இதயத்தில் கடவுள் தான் இருக்கிறார். ராஜினாமாவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் பெங்களூருவுக்கு திரும்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story