3 முக்கிய சாலைகளில் மேம்பாட்டு பணிகள்: போக்குவரத்து நெரிசலால் திணறும் வாகன ஓட்டிகள்


3 முக்கிய சாலைகளில் மேம்பாட்டு பணிகள்: போக்குவரத்து நெரிசலால் திணறும் வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 28 July 2019 4:14 AM IST (Updated: 28 July 2019 4:14 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் உள்ள முக்கிய சாலைகளில் மின்சார கேபிள் பதித்தல், புதிய பாலம் கட்டுமான பணிகள் ஆகிய மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

கோவை,

கோவை உக்கடம், திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலைகளில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உக்கடம் பகுதியில் ஏற்பட்ட நெரிசலை தொடர்ந்து அங்கு மாற்று வழியில் வாகனங்கள் இயக்கப்படுவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது.

ஆனால் கோவை-அவினாசி சாலையில் லட்சுமி மில் சந்திப்பில் இருந்து நவ இந்தியா சிக்னல் வரை கடந்த 20 நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கோவை அவினாசி மேம்பாலத்தில் இருந்து விமானநிலையம் வரை உள்ள 6 கிலோ மீட்டர் தூர சாலையை கடப்பதற்கு முன்பு 45 முதல் 50 நிமிடங்கள் ஆகும். ஆனால் தற்போது லட்சுமி மில் சந்திப்பை கடப்பதற்கே 30 நிமிட நேரம் ஆகிறது. இதற்கு காரணம் மின்கேபிள்கள் பதிப்பதற்கான பள்ளம் சாலையோரம் வெட்டப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு போதிய இடம் இல்லாமல் உள்ளது.

இதனால் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்கிறது. இந்த நிலையில் நேற்று முதல் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையிலும் மின்கேபிள் பதிப்பதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சாலையின் மொத்த அகலத்தில் 25 சதவீத சாலை மேம்பாட்டு பணிக்காக எடுக்கப்படுவதால் மீதி உள்ள சாலையில் தான் வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது. இதனால் ரேஸ்கோர்ஸ் சாலையிலும் நேற்று முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட் டுள்ளது. இதேபோன்று கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் மற்றும் ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெறுவதால் அந்த சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாய்பாபா கோவில் போலீஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் சாலையில் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து தான் செல்கின்றன. ஒரு இடத்தை கடப்பதற்கு குறைந்தபட்சம் 30 நிமிட நேரம் ஆகிறது. இதனால் அந்த சாலையிலும் காலை, மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கோவை-திருச்சி சாலையில் ரெயின்போ முதல் கோவை பங்கு சந்தை வரை மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கியதில் இருந்தே போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாக உள்ளது. காலை-மாலை நேரங்களில் அந்த சாலையை கடப்பதற்கு மணிக்கணக்கில் ஆகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது:-

கோவையின் முக்கிய சாலைகளான திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலைகளில் மேம்பால பணிகள் நடைபெறுகின்றன. இதனால் அந்த சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை தவிர்க்க முடியாது. ஆனால் அந்த சாலையில் நெரிசல் அதிகமாக இருப்பதால் அதற்கு மாற்றாக இருக்கும் கோவை-அவினாசி சாலையை பயன்படுத்தலாம் என்றால் அங்கும் தற்போது மின்சார கேபிள்கள் பதிக்கும் பணி நடக்கிறது. இதனால் அந்த சாலையும் தற்போது போக்குவரத்து நெரிசலுக்குள்ளாகி உள்ளது. ஒரு பணியை முடித்த பின்னர் அடுத்த சாலையில் பணியை மேற்கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் மூன்று சாலைகளிலும் பள்ளம் தோண்டும் வேலையும், பாலம் கட்டும் வேலையும் நடப்பதால் வாகன ஓட்டிகள் எப்படி போவது என்றே தெரியாமல் விழிபிதுங்கி உள்ளனர். இதேபோல கோவையின் மேற்கு பகுதியில் ஆர்.எஸ்.புரத்தில் மாதிரி சாலை அமைக்கிறோம் என்று கூறி சாலையை தோண்டி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

முக்கிய சாலைகளில் மேம்பாட்டு பணிகள் நடக்கும் போது அதை விரைந்து முடிக்க வேண்டும். அந்த சாலைகளுக்கு வந்து சேரும் இணைப்பு சாலைகளிலும் ஆக்கிரமிப்பு உள்ளதால் அதிலும் செல்ல முடியவில்லை. லட்சுமி மில் சந்திப்பில் மின் கேபிள் பதிக்க பள்ளம் தோண்டி 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் பணி முடிந்த இடத்திலும் பள்ளம் மூடப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. மின் கேபிள் பதிக்க பதிக்க பள்ளத்தை மூடினால் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story