பெங்களூரு போலீஸ் கமிஷனருடன், எடியூரப்பா ஆலோசனை


பெங்களூரு போலீஸ் கமிஷனருடன், எடியூரப்பா ஆலோசனை
x
தினத்தந்தி 27 July 2019 10:45 PM GMT (Updated: 27 July 2019 10:45 PM GMT)

பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலோக்குமாருடன் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அப்போது குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடியூரப்பா உத்தரவிட்டார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள எடியூரப்பா நேற்று பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் வைத்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலோக்குமாருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, பெங்களூரு நகரில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் துறையில் எனது தலையீடு இருக்காது. எனது கட்சியை சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பெங்களூருவில் நடக்கும் நிலமோசடியில் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் விரைவில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் எடியூரப்பா கூறினார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று உடனடியாக போலீஸ் கமிஷனர் அலோக்குமார் தலைமையில் நேற்று போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பெங்களூரு மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன், போக்குவரத்து பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் உள்பட 8 மண்டல துணை போலீஸ் கமிஷனர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது எடியூரப்பாவின் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அலோக் குமார் கூறினார். அத்துடன் குற்றங்கள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று அவர் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Next Story