ஆவடியில் பயங்கரம்: கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை மர்ம கும்பலுக்கு வலைவீச்சு


ஆவடியில் பயங்கரம்: கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 28 July 2019 4:38 AM IST (Updated: 28 July 2019 4:38 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி அருகே கட்டிட தொழிலாளி உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடி,

ஆவடி கோயில்பதாகை வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 26). கட்டிட தொழிலாளி. திருமணம் முடிக்காத இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 12.15 மணிக்கு அங்கு 3 பேர் கொண்ட மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்தது.

அவர்கள் 3 பேரும் வாசலின் அருகே நின்றபடி அசோக்குமாரை அழைத்துள்ளனர். இதனையடுத்து அவர் வீட்டுக்கு வெளியே வந்தார். அப்போது அந்த மர்மநபர்கள் உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் அசோக்குமார் தலை, முகம் உட்பட பல இடங்களில் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.

இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த அசோக்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்சில் வந்த மருத்துவ குழுவினர் அசோக்குமாரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அசோக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, மர்மநபர்கள் அசோக்குமாரை தாக்கும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

கொலையாளிகளை பிடிப்பதற்காக ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் ஜான்சுந்தர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அசோக்குமார் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story