தானே மாவட்டத்தில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது; 120 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
தானே மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதில் சிக்கிய 120-க்கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
தானே,
மும்பையை அடுத்த தானே மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த மழை பெய்தது. விடிய-விடிய மழை கொட்டி தீர்த்தது. இதன் எதிரொலியாக அங்குள்ள உல்லாஸ் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அந்த நதியையொட்டிய அம்பர்நாத், பத்லாப்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
பத்லாப்பூர் அருகே மும்பையில் இருந்து கோலாப்பூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் வெள்ளத்தில் சிக்கியதில், அதில் தவித்த 1,050 பயணிகள் மீட்கப்பட்டனர்.
மேலும் ஏராளமான குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. பஸ், வேன், கார் போன்ற வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. சில இடங்களில் மேம்பாலங்கள் மூழ்கும் அளவுக்கு பிரளயம் ஏற்பட்டது.
இந்தநிலையில் பத்லாப்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கை வெள்ளம் சூழ்ந்தது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள், அந்த பகுதி பொதுமக்கள் சுமார் 70 பேர் உயிரை காப்பாற்றி கொள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரையில் ஏறி தஞ்சம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சென்ற பேரிடர் மீட்பு படையினர், விமானப்படையினரின் உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் அவர்களை மீட்டனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘காலை 11 மணியளவில் பெட்ரோல் பங்க்கில் பொதுமக்கள் சிக்கியுள்ள தகவல் கிடைத்தது. உடனே விமானப்படையினர் உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் அவர்களை மீட்டோம்’ என்றார். இதேபோல வெள்ளம் காரணமாக தானே மாவட்டம், சகாத் பகுதியில் உள்ள ரெசார்ட்டில் சிக்கியிருந்த 46 பேரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
தானே மாவட்டத்தில் மொத்தம் 120-க்கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டதாக விமான படையினர் தெரிவித்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தானே மாவட்டத்தில் அதிகப்பட்சமாக முர்பாட் தாலுகாவில் 33.2 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story