மும்பை அருகே தண்டவாளம் மூழ்கியதால் 1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில்; பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு
மராட்டியத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, மும்பை அருகே தண்டவாளம் மூழ்கியதால், ரெயில் வெள்ளத்தில் சிக்கியது. ரெயிலில் பல மணி நேரம் தவித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
தானே,
மராட்டியத்தில் சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு கடந்த 2 நாட்களாக பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது.
மும்பை மற்றும் புறநகர் பகுதிகளிலும், மும்பையை அடுத்த தானே மாவட்டத்திலும் நேற்று முன்தினம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் கார், வேன் போன்ற வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.
கனமழை காரணமாக பஸ், ரெயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்றும் பல இடங்களில் மழை நீடித்தது.
இந்த நிலையில், மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8.20 மணிக்கு கோலாப்பூருக்கு மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. மழைகாரணமாக ரெயில் மிகவும் மெதுவாகவே சென்றது. ரெயில் இரவு 11 மணியளவில் தானே மாவட்டம் அம்பர்நாத் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ரெயில் சக்கரங்கள் மூழ்கும் அளவுக்கு தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் அம்பர்நாத் ரெயில்நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் அங்கு ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தண்டவாளத்தில் தேங்கி இருந்த நீர் ஓரளவு வடிந்ததால், அங்கு இருந்து ரெயில் மீண்டும் புறப்பட்டது. ரெயில் அதிகாலை 3 மணி அளவில் பத்லாப்பூர்-வன்கானி இடையே ஜம்டோலி என்ற கிராமத்தின் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக ஓடும் உல்லாஸ் நதியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரை புரண்டு ஓடிய வெள்ளம் தண்டவாளத்தை மூழ்கடித்தது.
இதனால் செய்வதறியாமல் திகைத்த என்ஜின் டிரைவர் நடுவழியில் ரெயிலை நிறுத்தினார். தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. எனவே ரெயிலை இயக்க முடியவில்லை. அங்கேயே நின்றதால் பயணிகள் விடிய, விடிய ரெயிலில் பரிதவித்தனர்.
நேற்று காலை 7 மணி அளவில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சிலர் அங்கு வந்தனர். பீதியடைய வேண்டாம் என்று பயணிகளை கேட்டுக்கொண்ட அவர்கள், வெள்ளம் அதிகமாக இருப்பதால் ரெயிலை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் எச்சரித்தனர்.
நான்கு புறமும் கண்ணுக்கெட்டும் தொலைவுக்கு தரை பரப்பை பார்க்க முடியாதபடி வெள்ளம் சூழ்ந்து இருந்ததால் பயணிகள் திகில் அடைந்தனர். உயிரை கையில் பிடித்துக் கொண்டு ரெயிலிலேயே தவித்தபடி இருந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், மீட்புப் பணிக்காக ஹெலிகாப்டர்கள் விரைந்தன. காலை 9 மணி அளவில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் உள்ளூர் போலீசார் அங்கு சென்றனர்.
அவர்கள், ரெயிலில் சிக்கி இருந்த பயணிகளை ரப்பர் படகுகள் மூலம் மீட்டனர். அங்கிருந்து சுமார் 1½ கி.மீ. தொலைவில் இருந்த மண்டபத்துக்கு அவர்களை கொண்டு பாதுகாப்பாக தங்க வைத்தனர். அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு பிற்பகல் 3 மணி அளவில் மீட்புப் பணிகள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ரெயிலில் இருந்த 1,050 பயணிகள் பத்திரமாக மீட்டதாக மத்திய ரெயில்வே தெரிவித்தது. இதில் 9 கர்ப்பிணி பெண்களும், பல முதியவர்களும் அடங்குவர். ஒரு மாத பச்சிளம் குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டது.
முன்னதாக மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு செல்லும் முன்பே சில பயணிகளை அந்த பகுதி மக்கள் மீட்டு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ரெயிலை மழை வெள்ளம் சூழ்ந்து இருந்ததால் மீட்பு படையினரால் விரைவாக அங்கு செல்ல முடியவில்லை என்று கூறப்பட்டது.
மீட்கப்பட்ட பயணிகள் பஸ்கள் மூலம் பத்லாப்பூர் ரெயில்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் சிறப்பு ரெயில் மூலம் அந்த பயணிகள் புனே, தவுன்ட் வழியாக கோலாப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மீட்புப் பணிகள் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டதாக பயணிகள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து பிரியா என்ற பயணி கூறியதாவது:-
ரெயில் வெள்ளத்தில் சிக்கியது குறித்து தீயணைப்பு துறை அவசர எண்ணுக்கு போன் செய்தோம். அந்த அழைப்பு ஆமதாபாத் தீயணைப்பு நிலையத்துக்கு சென்றது. அவர்கள் மும்பைக்கு வந்து எங்களால் மீட்பு பணியில் ஈடுபடமுடியாது என்றனர். ரெயில்வே போலீஸ் அவசர உதவி எண்ணுக்கு போன் செய்தோம். அப்போது அவர்கள் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என கூறினர். பல மணி நேரம் ரெயிலில் மிகவும் அவதிப்பட்டோம். காலை 9 மணிக்குத்தான் மீட்பு படையினர் வந்தனர். அருகில் உள்ள கிராம மக்கள்தான் முதலில் ஓடிவந்து உதவி செய்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தானே மாவட்டத்தில் வெள்ளத்தில் ரெயில் சிக்கியது மட்டுமின்றி தாழ்வான பல பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
பலத்த மழைகாரணமாக நேற்று காலை மும்பை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 9 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.
இதேபோல மும்பைக்கு வர வேண்டிய சில ரெயில்கள் பன்வெல் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. மேலும் மும்பை-கோவா நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மும்பை நகரில் 9.73 செ.மீ. மழையும், கிழக்கு புறநகரில் 16.3 செ.மீ. மழையும், மேற்கு புறகரில் 13.2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்கிய தானே மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 33.2 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது.
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி
நேற்று பெய்த கனமழையின் காரணமாக உல்லாஸ் நதியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தண்டவாளத்தில் வெள்ளநீர் சூழ்ந்ததால் எக்ஸ்பிரஸ் ரெயில் மேற்கொண்டு செல்ல முடியாமல் விடிய விடிய நடுவழியில் நின்றது. இந்த ரெயிலில் பயணம் செய்த ரேஷ்மா காம்ளே என்ற 9 மாத கர்ப்பிணிக்கு அந்த நேரத்தில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதனால் ரெயிலில் இருந்த மற்ற பயணிகள் உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் அவரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இவரை தொடர்ந்து மேலும் அந்த ரெயிலில் 8 கர்ப்பிணி பெண்கள் இருந்ததால் அவர்களையும் ரப்பர் படகு மூலம் மீட்டனர்.
இதையடுத்து அவர்கள், அங்கு தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Related Tags :
Next Story