அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் வாணியம்பாடி தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் வாணியம்பாடி தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 28 July 2019 11:00 PM GMT (Updated: 28 July 2019 6:41 PM GMT)

‘அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும்’ என்று வாணியம்பாடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வாணியம்பாடி,

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மகன் டி.எம்.கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக நேற்று மாலை வாணியம்பாடி பஸ்நிலையம், வெள்ளக்குட்டை, நிம்மியம்பட்டு பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வேலூர் தொகுதி தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்திருக்க வேண்டியது. சிலர் திட்டமிட்டு சதி செய்து தி.மு.க.விற்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக ‘ரெய்டு’ நாடகம் நடத்தி, தமிழக மக்களை நம்ப வைக்க முயன்றனர். ஆனால் தேர்தல் நடந்தபோது மக்கள் நம்பவில்லை. ‘ரெய்டு’ என்ற நாடகத்தை தாண்டி மக்கள் தி.மு.க. மீது வைத்த நம்பிக்கையால் ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்சம் முதல் 5½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். வேலூரிலும் அப்போது தேர்தல் நடந்திருந்தால் தி.மு.க. அமோக வெற்றி பெற்றிருக்கும்.

தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளில் தி.மு.க. 3-வது பெரிய கட்சியாக கம்பீரமாக உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள கட்சிகளில் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தி.மு.க. தான். அந்த அளவிற்கு மக்கள் தி.மு.க. மீது நம்பிக்கை வைத்து வெற்றியை தேடி தந்தார்கள். அதை போன்றதொரு வெற்றியை பெற உதயசூரியன் சின்னத்தை ஆதரித்து நமது வேட்பாளர் கதிர்ஆனந்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

கருணாநிதியின் அன்பு தம்பிகளில் முக்கியமாக விளங்கியவர் இந்த மண்ணின் மைந்தர் துரைமுருகன். கருணாநிதிக்கு அடுத்தபடியாக சட்டமன்றத்தை அதிக நாட்கள் அலங்கரித்தவர் துரைமுருகன். அவருடைய மகன் கதிர்ஆனந்தை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இந்த தேர்தலில் கதிர்ஆனந்த் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு சென்றால் இந்த தொகுதியில் வாழும் மலைவாழ்மக்கள் பயன்பெறும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வருவார். அதேபோன்று மலைக்கிராமங்களுக்கு தேவையான மின்சார வசதி, சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்சினைகளும் முழுமையாக தீர்த்து வைக்கப்படும். ஒன்றியத்தில் உள்ள மல்லகொண்டாபகுதியில் தொழிற்பேட்டை அமைத்து வேலை வாய்ப்பை உருவாக்க பாடுபடுவார்.

மேலும் வாணியம்பாடி பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்தப்படும். தகுதி வாய்ந்த அனைத்து முதியவர்களுக்கும் உதவித்தொகை வழங்கவும், 100 நாள் வேலை திட்டம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் முறைப்படுத்துவோம். வாணியம்பாடி நகரில் செல்லும் கழிநீர் கால்வாய் தூர்வாரப்படும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் ரெயில்வே பாலம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கதிர்ஆனந்த் வெற்றி பெற்றால் பாலம் கட்டி முடிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும். 6 மாதத்தில் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

22 சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றது. 9 தொகுதிகளில் தான் அ.தி.மு.க. ஜெயித்தது. கூடுதல் தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றிருந்தால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரவேண்டும். அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் போராடி உரிமைகளை பெறவும் 39-வது எம்.பி.யாக கதிர்ஆனந்தை வெற்றி பெற வேண்டும். அவர் தொகுதி மக்களின் குறைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார். நாங்கள் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து வெற்றி பெற்றதாகவும், மிட்டாய் கொடுத்து மக்களை ஏமாற்றியதாகவும் அ.தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். அவர்கள் தேனியில் அல்வா கொடுத்தல்லவா வெற்றி பெற்றார்கள்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தை வேலூர் மாவட்டத்துக்கு கொண்டு வருவதற்காக தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வரவில்லை. அவர் இறந்த பின்னர் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இத்தேர்வு கிராமப்புற ஏழை, எளிய மக்களின் மருத்துவ கனவை சிதைக்க கூடியது. இதற்கு எல்லாம் முடிவுக்கு கொண்டு மக்கள் தி.மு.க.விற்கு வாக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ., வாணியம்பாடி தொகுதி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் முத்துசாமி, மேற்கு மாவட்ட செயலாளர் முத்தமிழ்செல்வி, கிழக்கு மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ், முன்னாள் எம்.எம்.ஏ. ஞானசேகரன், ஆசிரியர் வெங்கடாசலம், முன்னாள் கவுன்சிலர் கிரிராஜ், ஒன்றிய செயலாளர் அசோகன், காங்கிரஸ் சிறுபான்மைதுறை மாநில தலைவர் அஸ்லாம்பாஷா, வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு, பேரூராட்சி செயலாளர் செல்வராஜ், ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10 மணி அளவில் வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்ட மல்லங்குப்பம், தெக்குப்பட்டு, ராமநாயக்கன்பேட்டை, மல்லகுண்டா ஆகிய பகுதிகளில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து திண்ணை பிரசாரம் செய்தார். மேலும் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவருடன் கிழக்கு மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., நாட்டறம்பள்ளி ஒன்றிய செயலாளர் சூரியகுமார் உள்பட பலர் இருந்தனர்.

Next Story