கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 28 July 2019 11:15 PM GMT (Updated: 28 July 2019 7:05 PM GMT)

கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

குடியாத்தம், 

கே.வி.குப்பத்தில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தமிழகத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில் தடுப்பணைகள் கட்ட திட்டமிட்டு அதில் முதல்கட்டமாக ரூ.600 கோடியிலான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஏரி குளங்களை குடிமராமத்து செய்ய முதல் கட்டமாக ரூ.100 கோடியில் 1,519 ஏரிகள் தூர் எடுக்கப்பட்டது. அடுத்த கட்டமாக ரூ.328 கோடியில் 1,511 ஏரிகளில் பணிகள் நடந்து வருகிறது. தற்போது ரூ.500 கோடியில் 1,829 ஏரிகள் தூர் எடுக்கப்பட்டு விவசாயிகளை கொண்டு குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு எடுக்கப்படும் வண்டல் மண் விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது.

நாம் விவசாயம் செய்வதை பார்த்ததும் மு.க.ஸ்டாலின் குளத்தில் இறங்கினார். 2 குளங்களில் மண்ணை அள்ளி சீன் போட்டு சென்றுவிட்டார். மேட்டூர் அணை 83 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுகிறது. ஒரு நாளைக்கு 2000 லாரிகளில் வண்டல் மண் எடுக்கப்பட்டு விவசாயத்திற்கு இயற்கை உரமாக பயன்படுத்தப்படுகிறது.

100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்பட்டு விடும் என்று பொய் பிரசாரம் செய்தார்கள். 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படாது, தொடர்ந்து வேலை வழங்கப்படும். விவசாயத்தின் உபதொழிலாக கால்நடை வளர்க்கப்படுகிறது, அதனால்தான் கோழி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. பசுமை புரட்சி வெண்மை புரட்சி ஏற்படுத்த கறவை மாடுகள் வழங்கப்பட்டது. பெண்கள் சொந்த காலில் நிற்பதற்காக ஆடுகள் வழங்கப்பட்டது. இதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாது.

அவர் விவசாயி கிடையாது, நான் விவசாயி என்பதை சொல்லிக் கொள்வதை பெருமையாக கருதுகிறேன். ஸ்டாலின் கடந்த தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்றார். நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று கடனை தள்ளுபடி செய்ய இது பொதுத்தேர்தல் அல்ல. இதில் எப்படி நீங்கள் முழு வெற்றி பெற முடியும். கடந்த தேர்தலில் 13 சட்டமன்ற தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். 9 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றோம், நமக்கு கிடைத்தது தர்மத்தின் வெற்றி. அவர்கள் உண்மையைச் சொல்லி இருந்தால் ஒரு இடம் கூட கிடைத்திருக்காது. விவசாயிகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் தருவதாக அறிவித்தார். அவர்களால் எப்படி ஆட்சியில் இல்லாமல் கொடுக்க முடியும். கல்விக்கடனையும் ரத்து செய்வோம் என்று பொய் சொல்லி வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்கள் மத்தியிலும் ஆட்சிக்கு வர முடியவில்லை, மாநிலத்திலும் முடியவில்லை.

இப்போது என்ன சொல்லி வாக்கு கேட்பார்கள். எதையும் சொல்ல முடியாமல் என்னைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார். ஒரு கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மிக்சி, கிரைண்டர் கொடுத்தோம். ஜெயலலிதா மக்களுக்காக வாரி வாரி வழங்கினார். மாணவர்களுக்கு காலணி, சீருடை, சைக்கிள், மடிக்கணினி வழங்கினார். தி.மு.க. ஆட்சியில் என்ன கிடைத்தது. நாங்கள் 76 அரசு கலை கல்லூரிகள் கொண்டு வந்துள்ளோம். இதில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் குறைந்த கட்டணத்தில் கல்வி கற்று வருகிறார்கள்.

கிராமங்களில் ஏழை மக்களுக்கு பசுமை வீடு கட்டி கொடுக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். கூட்டு குடிநீர் திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் மீண்டும் சேர்க்கப்படும். கருத்தரிக்கும் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட ரூ.6 ஆயிரம் ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அம்மா பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது.

கடந்த 2011-ம் ஆண்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ 5,319 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் ரூ.66 கோடி கடன் வைத்துவிட்டுச் சென்றார்கள். அதையும் சேர்த்து தள்ளுபடி செய்து உள்ளோம். பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரத்து 410 கோடி பெற்று தந்துள்ளோம். உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் சிறந்து விளங்கியதால் மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. சொட்டு நீர் பாசனத்திற்கு ரூ.2,034 கோடி கொடுத்து குறைந்த தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 4 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.

கிராமங்களில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் தொடங்கப்பட்டு அதற்கு தேவையான அனைத்து விளையாட்டு பொருட்களும் வழங்கப்படுகிறது. தற்போது தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தை பொங்கலுக்கு அனைத்து குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மீண்டும் அனைத்து தொழிலாளர் குடும்பத்திற்கும் ரூ.2000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின்னர் அனைவருக்கும் கொடுக்கப்படும். இதற்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

கே.வி. குப்பத்தை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும். கவுண்டன்ய நதியின் குறுக்கே தரைப் பாலம் அமைக்கப்படும். பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும். இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற ஏ.சி.சண்முகத்திற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கலைச்செல்வி, மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் முரளி, ஒன்றிய நிர்வாகிகள் தேவன், பொன்முடி, கோபி, பா.ம.க. மாநில துணைத்தலைவர் சீக்கிய ரமேஷ், மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் பா.ஜ.க. மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன் நன்றி கூறினார்.

Next Story