வேலூர் அருகே வெங்கடாபுரம் குளத்தை தூர்வாரும் இளைஞர்கள் பொதுமக்கள் பாராட்டு


வேலூர் அருகே வெங்கடாபுரம் குளத்தை தூர்வாரும் இளைஞர்கள் பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 29 July 2019 3:45 AM IST (Updated: 29 July 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே உள்ள வெங்கடாபுரம் குளத்தை அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் அதிக ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் கொண்ட மாவட்டமாகும். வறட்சியின் காரணமாக அவை வறண்டு காணப்படுகிறது. மாவட்டத்தில் சில இடங்களில் ஏரி, குளங்களை இளைஞர்கள் தூர்வாரி வருகின்றனர்.

அதேபோன்று வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரம் அருகே உள்ள வெங்கடாபுரம் பகுதியில் புதர்மண்டி கிடந்த குளத்தை தூர்வார அப்பகுதி இளைஞர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று குளத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி தூர்வாரும் பணியை தொடங்கி உள்ளனர். இளைஞர்களின் முயற்சிக்கு கைக்கொடுக்கும் விதமாக அவர்களுடன், அப்பகுதி பொதுமக்களும் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து இளைஞர்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் உள்ள இந்த குளம் பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் ஆதாரமாக திகழ்ந்தது. இந்த குளம் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதில் நீர் ஊற்றெடுத்து எப்போதும் நிரம்பி காணப்பட்டது. குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரை விவசாயிகள் பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தனர். ஆனால் இந்த குளம் நாளடைவில் பயன்பாடு இல்லாமல் செடி, கொடிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. தற்போது இதனை சலவை தொழிலாளர்கள் துணி துவைக்க மட்டும் பயன்படுத்துகின்றனர். எங்கள் பகுதியில் குடிநீர் தேவை உள்ளது.

எனவே இதனை தூர்வார முடிவு செய்தோம். அதற்கான பணியை தொடங்கி உள்ளோம். குளத்தை ஆழப்படுத்தவும், கரையை பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகளையும் மேற்கொள்ள உள்ளோம். குடிநீர் குளமாக மீண்டும் இந்த குளத்தை மாற்றுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இளைஞர்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story