ஹாசன் டவுன், புறநகர் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த காட்டுயானை பிடிபட்டது கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்


ஹாசன் டவுன், புறநகர் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த காட்டுயானை பிடிபட்டது கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்
x
தினத்தந்தி 29 July 2019 4:15 AM IST (Updated: 29 July 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

ஹாசன் டவுன் மற்றும் புறநகர் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த காட்டுயானையை, கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.

ஹாசன்,

ஹாசன் டவுன் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக காட்டுயானை ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது. அது டவுனுக்குள்ளும், புறநகர் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. விவசாய நிலங்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வருகிறது. மேலும் அந்த காட்டுயானை தாக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் பேளூர் தாலுகா தேவரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா மற்றும் வனக்காவலர் அண்ணேகவுடா ஆகியோர் ஆவர்.

இதனால் அந்த காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில் அந்த காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக அவர்கள் அரசிடம் உரிய அனுமதி பெற்றனர்.

இதையடுத்து அந்த காட்டுயானையை பிடிக்க யானைகள் முகாமில் இருந்து, தசரா விழாவில் பங்கேற்கும் 5 கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்தனர். பின்னர் கால்நடை மருத்துவக்குழுவினரும், கும்கி யானைகளுடன் வனத்துறையினர் நேற்று காலையில் அந்த ஒற்றை காட்டுயானையைத் தேடி வனப்பகுதிக்குள் சென்றனர். முதலில் அவர்கள் சீகேகுட்டா வனப்பகுதியில் முகாமிட்டு அந்த காட்டுயானையை தேடினர். இதுபற்றி வனத்துறை அதிகாரி சிவராம் பாபு கூறியதாவது:-

அட்டகாசம் செய்து வரும் அந்த ஒற்றை காட்டுயானையை பிடிக்க கும்கி யானைகளான அபிமன்யு, கிருஷ்ணா, அஜேயா, விக்ரம் மற்றும் ஹர்ஷா ஆகியவற்றை வரவழைத்துள்ளோம். தற்போது கும்கி யானைகளின் உதவியுடன் அந்த காட்டுயானையை வனப்பகுதியில் தேடி வருகிறோம். விரைவில் அதை பிடித்து விடுவோம்“ என்று கூறினார்.

இந்த நிலையில் நேற்று மாலையில் பேளூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆலதஹள்ளி வனப்பகுதியில் வனத்துறையினர் கும்கி யானைகளுடன் சென்று காட்டுயானையை தேடினர். அப்போது அங்கு காட்டுயானை சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. அது கும்கி யானைகளைக் கண்டதும் ஆக்ரோஷமாக பிளிறிக் கொண்டு வந்தது. அப்போது அந்த காட்டுயானையுடன், அபிமன்யு கும்கி யானை மல்லுக்கட்டியது.

அந்த சந்தர்ப்பத்தில் மருத்துவக்குழுவினரும் துப்பாக்கி மூலம் காட்டுயானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். மயக்க ஊசி செலுத்தப்பட்டதும் அந்த காட்டுயானை அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் ஆக்ரோஷமாக ஓடியது. பின்னர் அது மயங்கி கீழே விழுந்தது.

அதையடுத்து வனத்துறையினர் கும்கி யானைகளுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் கயிற்றைக் கொண்டு அந்த யானையின் கால்களை கட்டினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அந்த காட்டுயானை மயக்கம் தெளிந்து எழுந்து நின்றது. அதையடுத்து அபிமன்யு உள்ளிட்ட கும்கி யானைகள், அந்த காட்டுயானை ஆசுவாசப்படுத்தின. பின்னர் அந்த காட்டுயானையை, கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் அழைத்து வந்து லாரியில் ஏற்றினர்.

பின்னர் அந்த காட்டுயானை குடகு மாவட்டத்தில் உள்ள துபாரே யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த காட்டுயானைக்கு கும்கி யானை பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த காட்டுயானை பிடிபட்டு விட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story