காரிமங்கலம் அருகே பெண் எரித்து கொலை யார் அவர்? போலீசார் விசாரணை


காரிமங்கலம் அருகே பெண் எரித்து கொலை யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 July 2019 4:45 AM IST (Updated: 29 July 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே சாலையோரம் பெண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். யார் அவர்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரிமங்கலம், 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் கிருஷ்ணகிரி சாலையில் டீ-குண்டு என்ற இடத்தில் கும்பாரஅள்ளி ரோட்டில் நேற்று காலை சாலையோரம் பாறைகளுக்கு இடையே ஒரு பெண் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து கும்பாரஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் பூவரசனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பூவரசன் காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஸ்வநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளவரசன், விஜயசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு கார்்த்திகேயன் விரைந்து வந்து தீயில் எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அந்த பெண்ணுக்கு சுமார் 30 முதல் 32 வயது இருக்கும். அவரது வலது கையில் தீயில் எரிந்து கருகிய வளையல்களும், இடது முழங்கைக்கு மேல் காப்பு ஒன்றும் அணிந்து இருந்ததும் தெரியவந்தது.

ஆனால் அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து தர்மபுரியில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது பெண்ணின் உடல் கிடந்த இடத்தில் இருந்து கிருஷ்ணகிரி-தர்மபுரி சாலை வரை ஓடி சென்று நின்று விட்டது. பின்னர், போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை வேறு எங்காவது இருந்து கடத்தி வந்து இங்கு கொலை செய்து தீவைத்து எரித்தார்களா? எதற்காக அவர் தீவைத்து எரிக்கப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த மாதம் 7-ந் தேதி இதே சாலையோரம் பெங்களூருவை சேர்ந்த வசந்தாமேரி என்ற பெண் கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை நடந்து 50 நாட்கள் இடைவெளியில் தற்போது மீண்டும் பெண் ஒருவர் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளார். இந்த தொடர் சம்பவம் காரிமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story