தமிழகம், புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் - சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம்


தமிழகம், புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் - சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 29 July 2019 5:00 AM IST (Updated: 29 July 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி,

சி.ஐ.டி.யு. புதுச்சேரி பிரதேச குழுவின் 11-வது மாநாடு நேற்று காலை சித்தன்குடியில் உள்ள அண்ணாமலை நாடார் உறவின்முறை திருமண நிலையத்தில் நடந்தது. இதன் தொடக்க விழாவிற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராஜாங்கம் மாநாட்டு கொடியை ஏற்றிவைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்மாநில செயலாளர் கருப்பையன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சங்கர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் உலகநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக தொழிலாளர் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணாசிலையில் இருந்து தொடங்கி அண்ணாசாலை, காமராஜர் சாலை வழியாக மாநாடு நடைபெற்ற இடத்தை அடைந்தது.

மோட்டார் வாகன சட்டத் திருத்தம்-2019, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகம், புதுவையில் மத்திய அரசு கைவிட வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்கள் 44-ஐ நான்காக சுருக்கி தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்ற வேண்டும், பண்டிகை கால உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

புதுவை மாநிலத்தில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள குவாரிகள் அமைக்க வேண்டும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை அழிக்காமல், சாலையோர வியாபாரிகள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ரோடியர், சுதேசி, பாரதி பஞ்சாலைகளை புனரமைத்து மீண்டும் இயக்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் ஓய்வுகால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை சீரமைத்து சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Next Story