தொண்டமாநத்தத்தில் 2-வது நாளாக ஆய்வு: திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - கிராம மக்களுக்கு கிரண்பெடி அறிவுரை


தொண்டமாநத்தத்தில் 2-வது நாளாக ஆய்வு: திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - கிராம மக்களுக்கு கிரண்பெடி அறிவுரை
x
தினத்தந்தி 29 July 2019 4:15 AM IST (Updated: 29 July 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

அரசு திட்டங்களை முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கிராம மக்களுக்கு கவர்னர் கிரண்பெடி அறிவுரை கூறினார்.

வில்லியனூர்,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி நேற்று முன்தினம் தொண்டமாநத்தம் கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுடன் கலந்துரையாடினார். அந்த பகுதியில் உள்ள குளங்களை ஆய்வு செய்து முறையாக பராமரிக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக கவர்னர் கிரண்பெடி தொண்டமாநத்தம் கிராமத்தில் ஆய்வு செய்தார். அங்கு அவர் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களிடம் கலந்துரையாடினார். பின்னர் அந்த பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தை நிர்ணயிப்பதற்காக அதன் சாவியை வாங்கி மகளிர் சுயஉதவிக்குழு பெண்களிடம் வழங்கினார்.

பின்னர் அவர்களிடம், சமுதாய நலக்கூடத்தை முறையாக பராமரிக்க வேண்டும். அதில் வரும் வருமானத்தை வைத்து சுயஉதவிக்குழுவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். திட்டங்களை தொடங்கி வைப்பது தான் எனது வேலை. அதனை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அது உங்கள் (மக்கள்) கையில் தான் உள்ளது.

சமுதாய நலக்கூடத்தில் யாரும் மது அருந்தக்கூடாது. குற்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாக்க காவலாளியை நியமிக்க வேண்டும். பெண்கள் உங்கள் வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளுக்கும் சமைக்க கற்றுக்கொடுங்கள். பிற்காலத்தில் அது அவர் களுக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சமுதாய நலக் கூடத்தை சீரமைத்து கொடுத்த வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகத்திற்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்த அந்த பகுதியில் 60 மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் இளைஞர்களுக்கு கைப்பந்து போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

வருங்காலத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு தொடர்ந்து போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

புதுவை இந்திராகாந்தி சிலை அருகே கடந்த ஆண்டு திறக்கப்பட்டு, அடிப்படை வசதி இல்லாததால் கவர்னர் நடவடிக்கையின் பேரில் நகராட்சி அதிகாரிகளால் தனியார் துணிக்கடை சீல் வைக்கப்பட்டது. அந்த கடையில், குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் திறக்க அனுமதி கேட்டு, கடை உரிமையாளர்கள் புதுவை நகர அமைப்பு குழுமத்திடம் விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நகர அமைப்பு குழும அதிகாரிகள் நேற்று காலை அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்த கவர்னர் கிரண்பெடியும் துணிக்கடைக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு பார்க்கிங் வசதி உள்ளிட்ட என்னென்ன குறைகள் உள்ளதோ அதனை சரி செய்யுமாறு கடை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க போக்குவரத்து நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story