மத்திய அரசின் சட்ட திருத்தங்கள் பல்வேறு தரப்பினரையும் பாதிக்கும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி பேட்டி


மத்திய அரசின் சட்ட திருத்தங்கள் பல்வேறு தரப்பினரையும் பாதிக்கும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி பேட்டி
x
தினத்தந்தி 29 July 2019 4:00 AM IST (Updated: 29 July 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் சட்ட திருத்தங்கள் பல்வேறு தரப்பினரையும் பாதிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்தார்.

விருதுநகர்,

மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பல சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தம் யாரையும் தீவிரவாதி என கைது செய்ய வழிவகை செய்துள்ளது. இதனால் அரசை விமர்சிப்பவர்கள் கூட இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய வாய்ப்புள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ள திருத்தம் தலைமை ஆணையரை எப்போது வேண்டுமானாலும் மாற்ற வழிவகுத்துள்ளது. எனவே தலைமை தகவல் ஆணையரை ஆளும்கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வாய்ப்பு ஏற்படும். மோட்டார் வாகன சட்ட திருத்தமும் தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

புதிய கல்வி கொள்கையின் கருத்து கேட்பு கூட்டம் ரகசியமாக நடத்தப்படுகிறது. இதற்கான வரைவு அறிக்கை இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. கருத்து கூறுவதற்கும் குறைந்த கால அவகாசமே வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். கல்வி முழுமையாக லாபம் தரும் தொழிலாக மாற்றப்படுவதற்கு இந்த புதிய கல்வி கொள்கை வழிவகுக்கும். எனவே புதிய கல்வி கொள்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம்.

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு முறையாக வேலை வழங்கப்படுவதில்லை. வேலை செய்தவர்களுக்கு ஊதியமும் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. இதில் மாநில அரசு போதிய அக்கறை காட்டவில்லை என மத்திய தணிக்கை குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசிடம் இருந்து வந்த ரூ.6 ஆயிரம் கோடியை செலவு செய்யாமலேயே மாநில அரசு திருப்பி அனுப்பி உள்ளது. 134 நலத்திட்டங்கள் உரிய காலத்தில் நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தில் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத ஏழை-எளிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இடம் வழங்கப்படவில்லை. அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். ஆணவ படுகொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜனநாயக ரீதியான போராட்டங்கள் நடத்த போலீசார் அனுமதி மறுக்கும் நிலை உள்ளது. கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. இவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் உடன் இருந்தார்.

Next Story