‘அரசு பள்ளியின் தரம் குறைய ஆசிரியர்கள் காரணம் அல்ல’ அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கருத்து


‘அரசு பள்ளியின் தரம் குறைய ஆசிரியர்கள் காரணம் அல்ல’ அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கருத்து
x
தினத்தந்தி 29 July 2019 4:15 AM IST (Updated: 29 July 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளியின் தரம் குறைய ஆசிரியர்கள் காரணம் இல்லை. அரசு தான் காரணம் என்று அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கூறினார்.

சிவகாசி,

சிவகாசியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் அப்துல்காலம் அறிவாலயம் திறப்பு விழா நடைபெற்றது. அங்கு போட்டி தேர்வுகளுக்கு பயன்படக்கூடிய ஏராளமான புத்தகங்கள் அடங்கிய புதிய நூலகத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

புதிய கல்வி கொள்கையில் பல இடர்பாடுகள் இருக்கலாம். 7 வயது வரை உள்ள குழந்தைகள் வீட்டு சூழலில் படிக்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க வேண்டும். அந்த குழந்தைகள் விளையாட்டு தனமாக இருக்க வேண்டும். வீட்டுப்பாடங்கள் கொடுக்ககூடாது. வெற்றி, தோல்விகளை அந்த குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். என்ஜினீயரிங் படித்த 80 சதவீதம் பேர் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். தற்போது கல்லூரிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான என்ஜினீயரிங் இடம் காலியாக உள்ளது. ஆசிரியர் மேல் மாணவர்களுக்கு பயம் இல்லை. ஆசிரியர்களிடம் அடி வாங்கினால் போலீசிடம் அடி வாங்க வேண்டிய நிலைவராது. மாணவர்களை கண்டிக்க ஆசிரியர்கள் தயங்கும் நிலை உள்ளது. மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால் தான் அறிவார்ந்த சமுதாயம் மலரும்.

அரசு பள்ளியின் தரம் குறைந்துவிட்டது என்றால் அதற்கு ஆசிரியர்கள் காரணம் அல்ல. அரசு தான் காரணம். ஆசிரியர்களுக்கு எந்த அதிகாரத்தையும் அரசு வழங்கவில்லை. அனைவருக்கும் சமமான கல்வி வேண்டும் என்று நடிகர்சூர்யா கூறியதை நான் வரவேற்கிறேன். இந்தியா முழுவதும் ஒரே கல்வி கொள்கை இருந்தால் அது ஆபத்தில் முடியும். இந்த கல்வி கொள்கையில் தமிழக வரலாறு, கலாசாரம், சமூகம் இருட்டடிக்கப்படும். அதனால் ஒரே கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து மாநிலம் தான் முடிவு செய்ய வேண்டும். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும். அப்துல்கலாம் கனவை வருங்கால மாணவர்கள் தான் நிறைவேற்றுவார்கள்.

வளர்ச்சியை நோக்கி செல்லும் சீனா, நதிகளை இணைத்துக்கொண்டு வருகிறது. ஆனால் இந்தியா அதைபற்றி இப்போது தான் சிந்தித்து கொண்டு இருக்கிறது. சீனாவை விட தரமான பட்டாசுகளை உலகுக்கு சிவகாசியால் அளிக்க முடியும். அதை நோக்கி இங்குள்ள பட்டாசு ஆலைகள் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஐடியல் கோபாலசாமி, பாலம்மாள்ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். தேவேந்திரபூபதி, ரெங்கராஜ், ஓய்வு பெற்ற வனஅதிகாரி பால்ராஜ், மதுரை மடீட்சியா தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐடியல்சுரேஷ்குமார் செய்திருந்தார்.

Next Story