மும்பை அருகே வெள்ளத்தில் சிக்கிய ரெயில் மீட்கப்பட்டது மழைநீர் வடிந்ததால் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது


மும்பை அருகே வெள்ளத்தில் சிக்கிய ரெயில் மீட்கப்பட்டது மழைநீர் வடிந்ததால் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது
x
தினத்தந்தி 29 July 2019 5:30 AM IST (Updated: 29 July 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

மும்பை அருகே வெள்ளத்தில் சிக்கிய ரெயில் நேற்று மீட்கப்பட்டது. மழை நீர் வடிந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது.

மும்பை,

மராட்டியத்தில் பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு மும்பை புறநகர் மற்றும் அதன் அருகே உள்ள தானே மாவட்டத்தில் பேய் மழை கொட்டி தீர்த்தது. உல்லாஸ் நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக கல்யாண், பத்லாப்பூர், டிட்வாலா ஆகிய இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.

இந்தநிலையில், மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுடன் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் கோலாப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதிகாலை 3 மணியளவில் பத்லாப்பூர்-வன்கானி இடையே ஜம்டோலி கிராமம் அருகே சென்றபோது தண்டவாளமே தெரியாத அளவுக்கு அந்த பகுதியை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் ரெயில் மேற்கொண்டு செல்ல முடியாமல் பயணிகளுடன் நடுவழியில் நின்றது. அதிகாலை நேரம் என்பதால் ரெயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவ லறிந்து வந்த மீட்பு படையினர் கொட்டும் மழையில் பல மணி நேரம் போராடி ரெயில் பயணிகள் அனைவரையும் ரப்பர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்.

தண்டவாளத்தை மூழ்கடித்த வெள்ளம் காரணமாக கல்யாண்- கர்ஜத் இடையே ரெயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்தது.

பத்லாப்பூரில் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இதனால் வெளியில் வர முடியாமல் மக்கள் வீடு களுக்குள்ளேயே முடங்கி னர். வெள்ளத்தில் சிக்கிய 120-க்கும் மேற்பட்டோரை விமான படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.

உல்லாஸ்நதியில் கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளத்தால் நேற்று முன்தினம் அதிகாலை முர்பாட் ரத்யா கிராமத்தில் அந்த நதியின் குறுக்கே உள்ள பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது. சாலையும் பலத்த சேதம் அடைந்தது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.

மேலும் அங்குள்ள 370 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. முன்னதாக மீட்பு படையினர் அங்கு வசித்து வரும் மக்களை இரவோடு, இரவாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர்.

இந்தநிலையில், நேற்று மழையின் தீவிரம் குறைந்தது. பத்லாப்பூரில் மழை நின்றதை அடுத்து படிப்படியாக வெள்ளம் வடிய தொடங்கியது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். மகாலட்சுமி ரெயில் சிக்கிய தண்டவாளத்தை சூழ்ந்திருந்த வெள்ளம் நேற்று காலை வடிந்தது.

இதையடுத்து வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி ரெயிலை மீட்கும் பணி நடந்தது. அந்த ரெயில் அங்கிருந்து மெதுவாக இயக்கி பணிமனை கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

இருப்பினும் மின்சார ரெயில் பத்லாப்பூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன. பத்லாப்பூர்- கர்ஜத் இடையில் மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

கனமழையின் காரணமாக மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலை பலத்த சேதம் அடைந்து இருக்கிறது. அந்த சாலையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தநிலையில், இன்றும் (திங்கட்கிழமை) மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

Next Story