பணகுடி அருகே இஸ்ரோ மைய வளாகத்தில் குட்டி விமானம் பறந்ததாக பரபரப்பு


பணகுடி அருகே இஸ்ரோ மைய வளாகத்தில் குட்டி விமானம் பறந்ததாக பரபரப்பு
x
தினத்தந்தி 28 July 2019 10:15 PM GMT (Updated: 28 July 2019 8:52 PM GMT)

பணகுடி அருகே இஸ்ரோ மைய வளாகத்தில் மர்மமான முறையில் குட்டி விமானம் பறந்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆரல்வாய்மொழி,

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) வளாகம் உள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் இஸ்ரோ மைய வளாகத்தின் மேல் மர்மமான முறையில் குட்டி விமானம் ஒன்று பறந்ததாக கூறப்படுகிறது. சுமார் 500 மீட்டர் உயரத்தில் அந்த விமானம் பறந்ததாகவும், அதை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

போலீசில் புகார்

இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே இஸ்ரோ வளாகத்தின் சில பகுதிகள் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தின் கீழ் வருகிறது. எனவே, இந்த சம்பவம் தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், இஸ்ரோ மைய வளாகத்தில் குட்டி விமானம் பறந்ததா? என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

முதல்முறை அல்ல

இஸ்ரோ மைய வளாகத்தில் மர்மமான முறையில் குட்டி விமானம் பறந்ததாக கூறப்படுவது இதுவே முதல் முறை அல்ல. ஏற்கனவே 2015-ம் ஆண்டு இதேபோன்று விமானம் பறந்ததாக பொதுமக்கள் கூறிய தகவலின் அடிப்படையில் அங்குள்ள மலைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

மேலும் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி குட்டி விமானம் பறந்ததாக இஸ்ரோ சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story