மும்மொழி கொள்கையை கைவிட வேண்டும் கல்வி பாதுகாப்பு கருத்தரங்கில் தீர்மானம்
மும்மொழி கொள்கையை கைவிட வேண்டும் என்று நெல்லையில் நடந்த கல்வி பாதுகாப்பு கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை,
நெல்லை கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் கல்வி பாதுகாப்பு கருத்தரங்கம் நெல்லை கொக்கிரகுளத்தில் நேற்று நடந்தது. பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். தாமிரபரணி பாதுகாப்பு இயக்க நிர்வாகி சம்பத் சந்திரபாலன் வரவேற்று பேசினார். அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் கருணாநிதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில், “பாரதீய ஜனதா அரசு பொறுப்பேற்றதும் தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவு அறிக்கையை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே வெளியிட்டுள்ளது. இது பெரும்பான்மை மக்கள் பேசுகின்ற பிற மொழிகளில் இல்லை. எனவே இந்த கல்வி கொள்கை குறித்து விவாதித்து கருத்து தெரிவிக்க இந்த கல்வி ஆண்டு இறுதி வரை அவகாசம் அளிக்க வேண்டும். மேலும் முழுமையாக அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து நகல்களை பல்வேறு ஆசிரியர், மாணவர், பெற்றோர் அமைப்புகளுக்கு வழங்கவேண்டும்“ என்றார்.
கருத்தரங்கில், பின்லாந்து போன்ற நாடுகளில் பள்ளியில் சேர வயது 7 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 3 வயதில் குழந்தைகளை முறைசார் கல்வி திட்டத்திற்குள் கொண்டு வருவது அவர்களது ஆளுமை வளர்ச்சி, கல்வி கற்கும் திறனுக்கு எதிராக இருக்கும். எனவே 7 வயது வரையிலான குழந்தைகளை முறைசார் கல்வி திட்டத்திற்குள் கொண்டு வருவதை ஏற்றுக்கொள்கிறது. மும்மொழி கொள்கையை கைவிட்டு உயர் கல்வி வரை தாய் மொழியிலேயே கற்பதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், இந்திய பொதுவுடைமை கட்சி நிர்வாகி ரெங்கன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் காசி, மே 17 இயக்க நிர்வாகி புருஷோத்தமன், ஓவியா, பேராசிரியர்கள் சோமசுந்தரம், அமலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகி மணிவண்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story