முன்னாள் மேயர் உமா மகேசுவரி உள்பட 3 பேர் கொலை: குற்றவாளிகளை பிடிக்க செல்போன் உரையாடல்களை சேகரித்து விசாரணை


முன்னாள் மேயர் உமா மகேசுவரி உள்பட 3 பேர் கொலை: குற்றவாளிகளை பிடிக்க செல்போன் உரையாடல்களை சேகரித்து விசாரணை
x
தினத்தந்தி 29 July 2019 4:45 AM IST (Updated: 29 July 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேசுவரி உள்பட 3 பேர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் செல்போன் உரையாடல்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை, 

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேசுவரி. இவருடைய கணவர் முருகசங்கரன். இவர்கள் 2 பேரும் மேலப்பாளையத்தில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் ரோடு அருகே உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி அவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல், உமா மகேசுவரி, முருகசங்கரன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்தனர். அப்போது வீட்டில் இருந்த பணிப்பெண் மாரியும் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஆனால் 6 நாட்கள் ஆகியும் கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து துப்பு எதுவும் துலங்கவில்லை. பல்வேறு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவருடைய வீட்டில் கண்காணிப்பு கேமரா இல்லாத நிலையில் அந்த பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிலும் துப்பு துலங்கவில்லை.

இந்த நிலையில் 3 தனிப்படை போலீசாரும் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனியாக ஒரு கம்ப்யூட்டர் அறை அமைக்கப்பட்டுள்ளது.

அதில் 10-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை வைத்து நெல்லை மாநகர பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்களில் பதிவான சந்தேகத்திற்கு இடமான செல்போன்களின் உரையாடல்களை தனிப்படையினரும், திருச்சியில் இருந்து வந்துள்ள தொழில்நுட்ப பணியாளர்களும் கேட்டறிந்து வருகிறார்கள். இதில் சம்பந்தம் இல்லாத உரையாடல்களை கழித்து வருகிறார்கள். மேலும் உமா மகேசுவரியின் செல்போன், அவருடைய கணவர் செல்போன்களில் கடந்த 10 நாட்களாக பேசிய உரையாடல்களை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த கொலையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். விரைவில் அவர்களை பிடிப்போம்” என்றார்.

இந்த நிலையில் கொலையாளிகளை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏன் இன்னும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை? அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையம், போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Next Story