தட்டப்பள்ளம் பகுதியில், தேயிலை தோட்டத்தில் உலா வந்த காட்டுயானைகள்
தட்டப்பள்ளம் பகுதியில் தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் உலா வந்தன.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே குஞ்சப்பனை, தட்டப்பள்ளம், மாமரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலா பயிரிடப்பட்டு உள்ளது. இங்கு தற்போது பலாப்பழ சீசனாக உள்ளது.
இதன் காரணமாக மரங்களில் பழுத்து தொங்கும் பலாப்பழங்களை தின்பதற்கு சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வந்து முகாமிட்டு உள்ளன. இந்த காட்டுயானைகள் தேயிலை தோட்டங்கள், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் நடமாடி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குட்டியுடன் 2 காட்டுயானைகள் தட்டப்பள்ளம் பகுதியில் சாலையோரத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு உள்ளன.
இவை சாலையை கடந்து சென்று எதிரில் உள்ள பலா மரங்களில் இருந்து பழங்களை துதிக்கையால் பறித்து தின்றுவிட்டு, மீண்டும் சாலைக்கு வந்து உலா வருகின்றன. அதன்பின்னர் சாலையை கடந்து சென்று தேயிலை தோட்டத்தில் தஞ்சம் புகுந்து விடுகின்றன. இதனால் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
தட்டப்பள்ளம் சாலையில் காட்டுயானைகள் அடிக்கடி உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும். அவைகளை பார்த்தால் புகைப்படம் எடுக்க முயற்சிக்க கூடாது. பச்சை தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் தனியாக செல்லுவதை தவிர்க்க வேண்டும்.
கூட்டமாக செல்வதை கடைபிடிக்க வேண்டும். வயதானவர்கள் தனியாக வெளியே செல்லக்கூடாது. துணைக்கு யாரையாவது அழைத்து செல்ல வேண்டும். அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் தங்களது வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் எச்சரித்து உள்ளனர்.
Related Tags :
Next Story