வடமதுரை அருகே பயங்கரம், தொழிலாளி குத்திக்கொலை


வடமதுரை அருகே பயங்கரம், தொழிலாளி குத்திக்கொலை
x
தினத்தந்தி 29 July 2019 4:30 AM IST (Updated: 29 July 2019 4:39 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார்.

வடமதுரை,

வடமதுரை அருகே உள்ள கொல்லபட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 48). விவசாயி. அவருடைய மகன் மணிகண்டன் (26). இவர், வடமதுரை அருகே உள்ள எண்ணெய் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பெருமாளுக்கும், அவருடைய தம்பி திருப்பதிக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெருமாளின் மகள் சரண்யா காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். தனது மகள் காதல் திருமணம் செய்ய திருப்பதி, அவரது அக்காள் ஆலக்காள் ஆகியோர் தான் காரணம் என்று பெருமாள் கருதினார். இதுதொடர்பாக ஆலக்காளிடம் சென்று பெருமாள் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த திருப்பதி, தனது மகன் முனீஸ்வரனுடன் நேற்று காலை பெருமாளின் வீட்டுக்கு சென்று அவரிடம் தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த திருப்பதி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெருமாளை சரமாரியாக குத்தினார்.

இதை தடுக்க வந்த பெருமாளின் மகன் மணிகண்டனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து திருப்பதி தனது மகனுடன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். கத்திக்குத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த பெருமாளையும், மணிகண்டனையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

மேலும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பெருமாள் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பதி, முனீஸ்வரன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story