மது விருந்தின்போது மோதல், கத்திக்குத்து, தேடப்பட்டு வந்த ரவுடிகள் உள்பட 4 பேர் கைது


மது விருந்தின்போது மோதல், கத்திக்குத்து, தேடப்பட்டு வந்த ரவுடிகள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 29 July 2019 3:45 AM IST (Updated: 29 July 2019 4:39 AM IST)
t-max-icont-min-icon

மது விருந்துடன் பிறந்த நாள் கொண்டாடியபோது ஏற்பட்ட தகராறில் மாணவர் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் புதுச்சேரியை சேர்ந்த 3 ரவுடிகள் உள்பட 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

வானூர்,

புதுச்சேரி உழவர்கரை பகுதியை சேர்ந்தவர் சந்துரு (வயது 20), கேட்டரிங் கல்லூரி மாணவர். நேற்று முன்தினம் இவருடைய பிறந்த நாளையொட்டி தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு புதுச்சேரி அருகில் உள்ள தமிழக பகுதியான வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் மது விருந்து கொடுத்தார்.

இந்த விருந்தின்போது அதில் கலந்து கொண்ட ஹரிஷ் மற்றும் விஜய் ஆகியோருக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.

அப்போது விஜய் தனக்கு தெரிந்த 2 ரவுடிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வரவழைத்தார். பின்னர் விஜய் மற்றும் அவரது ரவுடி கூட்டாளிகள் சேர்ந்து ஹரிஷை தாக்கினார்கள். இதில் அவருக்கு தோள் மற்றும் கழுத்தில் கத்திக்குத்து விழுந்தது.

இந்த மோதல் பற்றி தகவல் அறிந்ததும் வானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த விஜய்யும் அவரது ரவுடி கூட்டாளிகளும் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த மோதல் குறித்து வானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்த மாணவர் சந்துரு மற்றும் அதில் பங்கேற்ற சரண்ராஜ், விஷ்வா, கவின் ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் சரண்ராஜ், விஷ்வா மற்றும் கவின் ஆகியோர் மோதலில் ஈடுபடவில்லை என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் விடுவித்து அனுப்பினர். சந்துருவை போலீசார் கைது செய்தனர்.

மேலும் விஜய்க்கு ஆதரவாக மோதலில் ஈடுபட்ட ரவுடிகள் புதுச்சேரி திலாசுபேட்டையை சேர்ந்த கிஷோர் மற்றும் சாந்தகுமார், முத்திரையர்பாளையத்தை சேர்ந்த கண்ணன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தேடப்பட்டு வரும் 3 ரவுடிகளும் புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான நாவற்குளத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று கிஷோர் (22), கண்ணன் (20), சாந்தகுமார் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜய் மற்றும் கோபி ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story