குறிஞ்சிப்பாடி அருகே, தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் நகை அபேஸ் - மர்மநபர்கள் 2 பேருக்கு வலைவீச்சு


குறிஞ்சிப்பாடி அருகே, தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் நகை அபேஸ் - மர்மநபர்கள் 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 July 2019 4:15 AM IST (Updated: 29 July 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடி அருகே தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் நகை அபேஸ் செய்த மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி,

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள குள்ளஞ்சாவடி அணுக்கம்பட்டு காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 50). நேற்று முன்தினம் இவர் வீட்டில் இருந்த போது மர்மநபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது அவர்கள் உங்கள் மகளுக்கு தோஷம் உள்ளது. அந்த தோஷத்தை நீக்க, அவர் அணிந்திருக்கும் நகைகளை கழற்றி தாருங்கள், அதை ஊரின் சுடுகாட்டு பகுதியில் வைத்து பூஜை செய்தால் தோஷம் நீங்கி விடும் என்று கூறினர். இதை நம்பிய வெங்கடேசன், தனது மகள் அணிந்திருந்த 5 பவுன் நகைகளை கழற்றி, அவர்களிடம் கொடுத்தார். இதையடுத்து அந்த மர்மநபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் வெங்கடேசனை அழைத்து கொண்டு சுடுகாடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள முந்திரி தோப்பு பகுதியில் சென்ற உடன், மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். பின்னர் வெங்கடேசனிடம் நீங்கள் இங்கேயே இருங்கள், உள்ளே வந்தால் அந்த தோஷம் உங்களுக்கு வந்து விடும் என்று கூறினர். மேலும் அவரிடம் இருந்த செல்போனையும் அவர்கள் வாங்கிக்கொண்டு, சுடுகாட்டுக்கு சென்றனர்.

இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் உள்ளே சென்ற அந்த மர்மநபர்கள் வெளியே வரவில்லை. இதையடுத்து வெங்கடேசன், சுடுகாட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது தான், நகை மற்றும் செல்போனை பறிகொடுத்ததை அறிந்தார். நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் இதுபற்றி குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் நகையை அபேஸ் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story