பழனி அருகே, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘கல்திட்டை’ கண்டுபிடிப்பு - கற்காலத்தை சேர்ந்தது என ஆய்வாளர் தகவல்


பழனி அருகே, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘கல்திட்டை’ கண்டுபிடிப்பு - கற்காலத்தை சேர்ந்தது என ஆய்வாளர் தகவல்
x
தினத்தந்தி 29 July 2019 4:00 AM IST (Updated: 29 July 2019 5:18 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘கல்திட்டை’ என்ற நினைவு சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழனி,

பழனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான கல்வெட்டுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இதையடுத்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, ராஜா ரவிவர்மா மற்றும் பழனியாண்டவர் கலைக்கல்லூரி பண்பாட்டுத்துறை பேராசிரியர் அசோகன், மாணவர்கள் திருவேங்கடம், செல்வராஜ் ஆகியோர் பழனி பகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஆயக்குடி தென்பகுதியிலுள்ள பொன்னிமலையில் மேற்கொண்ட ஆய்வில், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘கல்திட்டை’ என்ற நினைவு சின்னத்தை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:-

பழனி அருகே ஆயக்குடி பகுதியில் ‘ஆய்வேளிர்’ என்ற பழங்குடி தமிழ் மக்கள் வாழ்ந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து பொன்னிமலை பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டதில், இந்த நினைவு சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் உயிரெழுத்தான ‘ஃ’ வடிவத்தில், 2 பாறையின் மீது ஒரு பெரிய பாறை வைக்கப்பட்டு, அதன் அடிப்புற இணைப்புக்காக சிறிய கற்கள் வைக்கப்பட்டுள்ள வகையில் காட்சியளிக்கிறது. அவை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பெருங்கற்காலத்தை சேர்ந்தவை என்று கருதப்படுகிறது. பொதுவாக இந்த நினைவு சின்னம் அக்காலத்தில் வாழ்ந்து இறந்துபோனவரின் நினைவாக எழுப்ப கூடியதாகும். எனவே இதுவும் ஒரு போர் வீரனின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கலாம்.

இதேபோன்று ஒரு நினைவுச்சின்னம் ஆஸ்திரேலியாவின் ‘ஊரு’ என்ற இடத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் காலத்தை அங்குள்ள ஆய்வாளர்கள் 30 ஆயிரம் ஆண்டுகள் என்று கணித்துள்ளனர். அந்த நினைவு சின்னம் காணப்பட்ட பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் நிறம், உருவமைப்பு, பழக்கவழக்கம் அனைத்தும் தமிழர்களை ஒத்து காணப்படுகின்றன. அதேபோல் ஊரு என்ற தமிழ் சொல்லால் ஆன பகுதியில் நினைவுச்சின்னம் கிடைத்துள்ளதாலும், தமிழ் ஆய்வாளர்கள் கூறும் குமரிக்கண்டத்தின் கிழக்கு பகுதியே ஆஸ்திரேலியா என்பதாலும், அங்குள்ளவர்கள், தமிழர்களின் வழித்தோன்றலா என்ற ஆய்வு தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் ‘ஊரு’ பகுதியில் கண்டறியப்பட்ட நினைவு சின்னத்தை போன்றே இதுவும் உள்ளதால், இதன் காலமும் அதனை ஒத்திருக்கலாம். எனினும் அறிவியல் முறைப்படி அதன் காலத்தை துல்லியமாக அறிய வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு மேற்கொண்டால் தான் தமிழர்களின் தொன்மை உலகிற்கு தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story