பட்டிவீரன்பட்டி பகுதியில், மானாவாரி சாகுபடி பணிகள் தொடக்கம்


பட்டிவீரன்பட்டி பகுதியில், மானாவாரி சாகுபடி பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 29 July 2019 4:15 AM IST (Updated: 29 July 2019 5:18 AM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி பகுதியில் மானாவாரி பயிர் சாகுபடி பணிகளை தற்போது விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

பட்டிவீரன்பட்டி,

திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி, நல்லாம்பிள்ளை, நெல்லூர், சுந்தரராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து தொடர்ந்து பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையில் அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மானாவாரி பயிர் சாகுபடி பணிகளை தற்போது தொடங்கியுள்ளனர்.

பொதுவாக ஆடி மாதத்தில் விவசாயிகள் விதைப்பு பணிகளை தொடங்குவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை காலம் தாழ்த்தி பெய்து வருகிறது. கடந்த ஆண்டு ஆடி மாதம் முடியும் தருவாயில் தான் மழை பெய்தது. அதன் பின்னரே விதைப்பு பணிகளை விவசாயிகள் தொடங்கினர்.

ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், எனவே மானாவாரி பயிர் சாகுபடி பணிகளை தற்போதே தொடங்கியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மேலும் அவர்கள் கூறுகையில், பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதால் மானாவாரி பயிர் சாகுபடியை தொடங்கியுள்ளோம். குறிப்பாக கம்பு, சோளம், நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகியவற்றை சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளோம். அத்துடன் ஊடுபயிராக மொச்சை, தட்டைப்பயறு ஆகியவற்றையும் சாகுபடி செய்ய முடிவு செய்துள்ளோம்.

விதைப்பு பணி முடிந்து 3 முதல் 4 மாதங்களில் மானாவாரி பயிர்கள் அறுவடைக்கு தயாராகிவிடும். அப்போது விளைச்சல் அதிகமாக இருந்தால் எங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். முன்னதாக நிலத்தை உழவு செய்வதற்கு பாரம்பரியமாக நாங்கள் கலப்பைகளை பயன்படுத்துகிறோம். மாடுகளை பயன்படுத்தி கலப்பை மூலம் நிலத்தை உழுதால் தான் கூடுதல் விளைச்சல் கிடைக்கும் என்பது எங்கள் பகுதி நம்பிக்கையாக உள்ளது என்றனர்.

Next Story