சென்னை-மதுரை விரைவு ரெயிலில் முன்பதிவு இருக்கை பெட்டியில் பயணம் செய்பவர்கள் அவதி


சென்னை-மதுரை விரைவு ரெயிலில் முன்பதிவு இருக்கை பெட்டியில் பயணம் செய்பவர்கள் அவதி
x
தினத்தந்தி 29 July 2019 4:15 AM IST (Updated: 29 July 2019 5:18 AM IST)
t-max-icont-min-icon

சென்னை-மதுரை விரைவு ரெயிலில் முன்பதிவு இருக்கைகள் கொண்ட பெட்டியில் பயணம் செய்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திண்டுக்கல்,

சென்னையில் இருந்து மதுரைக்கு தினசரி மதியம் 1.40 மணிக்கு விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு இரவு 9 மணிக்கு சென்றடையும். ரெயிலின் என்ஜின் அருகில் 2 பெட்டிகளும், கார்டு பயணம் செய்யும் பெட்டி அருகில் 2 பெட்டிகளும் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பெட்டிகளும் முன்பதிவு மற்றும் குளிர்சாதன வசதியுடன் கூடிய முன்பதிவு இருக்கைகள் கொண்ட பெட்டிகளாக உள்ளன.

இந்த நிலையில் சென்னையில் இருந்து இந்த ரெயில் புறப்பட்டு செங்கல்பட்டை தாண்டியதும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கிறது. அப்போது முன்பதிவு இல்லாத பயணிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் இடம் இல்லாததால் அந்த பெட்டிக்கான டிக்கெட்டை எடுத்தவர்கள் முன்பதிவு இருக்கைகள் கொண்ட பெட்டியில் ஏறி பயணிக்கின்றனர். அப்போது அந்த பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் செயல்படுகின்றனர்.

அதாவது, ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களின் இருக்கைகளில் அமருவது, அவர்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத வகையில் அந்த பகுதியில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற செயல்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுத்து பயணம் செய்பவர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அந்த ரெயிலில் முன்பதிவு இருக்கைகள் கொண்ட பெட்டியில் பயணம் செய்த ஒருவர் கூறுகையில், நான் சென்னையில் இருந்து திண்டுக்கல்லுக்கு வருவதற்காக இந்த ரெயிலில் இருக்கை முன்பதிவு செய்து பயணம் செய்தேன்.

கூட்ட நெரிசலில் சிக்காமல் தனித்து பயணிக்கவே கூடுதல் கட்டணம் செலுத்தி இருக்கையை முன்பதிவு செய்தேன். ஆனால் அதிலும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுப்பவர்கள் பயணம் செய்கிறார்கள். இதுகுறித்து ரெயில்வே புகார் எண்களான 182, 138 ஆகியவற்றுக்கு தொடர்புகொண்டு புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் டிக்கெட் பரிசோதகர்களும் அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை. இது வேதனை அளிப்பதாக உள்ளது என்றார்.

Next Story