வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு அனுப்பிய சிறுவர்கள் கொத்தடிமையாக இருந்தால் தகவல் கொடுக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு


வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு அனுப்பிய சிறுவர்கள் கொத்தடிமையாக இருந்தால் தகவல் கொடுக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 July 2019 4:15 AM IST (Updated: 29 July 2019 5:18 AM IST)
t-max-icont-min-icon

வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சிறுவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தாலோ, கொத்தடிமையாக நடத்தப்பட்டாலோ தகவல் கொடுக்கலாம் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

தேனி,

கர்நாடக மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்த 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏற்கனவே தப்பி வந்து மீட்கப்பட்ட நபர் மற்றும் தற்போது மீட்கப்பட்ட 4 சிறுவர்களுக்கு தேவையான உதவிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்படும். அவர்கள் தங்களின் படிப்பை தொடர்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தவும், வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி, வீடு கட்டிக் கொடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறுவர்கள் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், தேனி மாவட்டத்தில் இருந்து அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு கர்நாடக மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்குள்ள உத்தரகண்டா மாவட்ட கலெக்டர் ஹரீஷ்குமாரிடம் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்தேன். சம்பந்தப்பட்ட பகுதிக்கான சப்-கலெக்டர் பிரித்தி ஹெலோட் என்பவர் தலைமையில் அங்குள்ள அதிகாரிகள் குழுவினரும் எங்கள் குழுவினருக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு முதல் முறை என்பதால் மன்னிப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் ஒருமுறை இதுபோல் அவர்கள் தங்களின் பிள்ளைகளை குழந்தை தொழிலாளர்களாக வேலைக்கு அனுப்பினால் அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் யாரேனும் இதுபோன்ற பணிக்காக வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தாலோ, அவர்கள் அங்கு கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தாலோ உடனே மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கோ, தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கோ தகவல் கொடுக்கலாம். அவ்வாறு கொத்தடிமைகளாக யாரேனும் இருந்தாலும் உடனே மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story