தமிழ்நாட்டின் சட்டம்–ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
தமிழ்நாட்டின் சட்டம்–ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்தார்.
ஆம்பூர்,
வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 5–ந் தேதி நடக்கிறது. அ.தி.மு.க.– தி.மு.க. இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 2 கட்சியிலும் வெளியூர்களில் இருந்து தொண்டர்கள் திரண்டு வந்து தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. நேற்று தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகிய 100 பேர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதி பூங்காவாக உள்ளது. கம்யூனிஸ்டு லீலாவதியை கொலை செய்தது யார்?. ஸ்டாலின் மதுரை சென்றபோது அவரை கத்தியால் குத்த முயன்ற சம்பவமும் நடந்தது. இதை எல்லாம் மு.க.ஸ்டாலின் எண்ணிப் பார்க்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில்தான் சட்டம்–ஒழுங்கு கேலிகூத்தாக இருந்தது. சட்டம்–ஒழுங்கு பற்றி பேச அவருக்கு தகுதி கிடையாது.
இவ்வாறு என கூறினார்.