வேலூரில் மு.க. ஸ்டாலின் நடந்து சென்று தேர்தல் பிரசாரம் குழந்தைக்கு பெயர் சூட்டினார்


வேலூரில் மு.க. ஸ்டாலின் நடந்து சென்று தேர்தல் பிரசாரம் குழந்தைக்கு பெயர் சூட்டினார்
x
தினத்தந்தி 30 July 2019 4:30 AM IST (Updated: 29 July 2019 7:19 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திண்ணை பிரசாரத்தின் போது பெண் குழந்தை ஒன்றுக்கு பெயர் சூட்டினார்.

அடுக்கம்பாறை, 

வேலூர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று 3–வது நாளாக தனது பிரசாரத்தை தொடங்கினார். காலை 10 மணி அளவில் வேலூர்–ஆரணி ரோட்டில் உள்ள பலவன்சாத்து குப்பம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பாகாயம் வரை நடந்துசென்று ஓட்டு சேகரித்தார். சாலையில் திரண்டிருந்த பெண்கள், வாகன ஓட்டிகளிடம் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவு தரும்படி கேட்டார். அப்போது இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஸ்டாலினுடன், ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பெண்கள், ஸ்டாலினுடன் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பென்னாத்தூரில் நடந்து சென்று ஓட்டு சேகரித்தார். பின்னர் சித்தேரிக்கு சென்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் சித்தேரியில் சாலை மற்றும் குடிநீர் வசதி ஆகியவை இல்லை. பலருக்கு முதியோர் பென்‌ஷன் நிறுத்தப்பட்டுள்ளது. அரியூரில் நடந்துவரும் ரெயில்வே மேம்பாலம் 3 ஆண்டுகளாகியும் இழுபறியாக நடந்துவருகிறது. இதனால் மருத்துவமனைக்கு செல்பவர்கள் உள்பட அனைவரும் அவதிக்கு உள்ளாகின்றனர். காட்பாடியில் இருந்து அமிர்திக்கு பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த திண்ணை பிரசாரத்தின் போது, பெண் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு பெயர் வைக்கும்படி கேட்டார். இதனையடுத்து குழந்தையை கையில் வாங்கிய மு.க.ஸ்டாலின், குழந்தைக்கு தேன்மொழி என பெயர் சூட்டினார்.

தொடர்ந்து சித்தேரியில் பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:–

மக்களவை தேர்தலில் கேபிள் கட்டணம் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாறவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், கேபிள் டி.வி. கட்டணம் குறைக்கப்படும். தமிழகத்தில் பல இடங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியது தி.மு.க. ஆட்சியில் தான். வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு, திருச்சியில் ரூ.616 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கலைஞரால் கொண்டுவரப்பட்டது. அதேபோல் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது அமைச்சராக இருந்த துரைமுருகன் வேலூர் மாவட்டத்திற்கும் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அப்போது நான் உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்தபோது, வேலூரில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பாதி பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. இதனால் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டு, அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகிக்க முடியவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அனைத்து கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் கொண்டுசெல்லப்படும். தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இதனால் தான் கிராமப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை. ராணிப்பேட்டையில் முதலில் சிப்காட் கொண்டுவந்தது தி.மு.க.தான். வேலூரில் பெண்கள் கலைக்கல்லூரி உருவாக்கித்தரப்படும். மேலும் சிட்காட் தொழிற்பேட்டை மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கி தருவதற்கு தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு, உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story