திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 July 2019 10:15 PM GMT (Updated: 29 July 2019 4:22 PM GMT)

வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு கடந்த 9 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்திற்கு 2019-2020-ம் ஆண்டிற்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 200 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் மானியத்தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும், சேவை தொழில்களுக்கு ரூ.3 லட்சமும், வியாபாரத்திற்கு ரூ.1 லட்சமும் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுபவர்களின் கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயதுக்குள்ளும், சிறப்பு பிரிவினர் (பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியில் இன வகுப்பினர்) 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பில் 25 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இவர்கள் காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது 044-27666787, 27663796 மற்றும் 9842480424 என்ற எண்ணில் தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ளலாம். மேற்கண்ட தகவல் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story