ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள கரடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது25). எம்.எஸ்சி. பி.எட் பட்டதாரி. இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்கள் 5 பேருடன் மோட்டார் சைக்கிளில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். இவர்கள் அனைவரும் ஒகேனக்கல்லில் கோத்திக்கல் பாறை என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தனர்.
அப்போது பிரபு திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இதுகுறித்து ஒகேனக்கல் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும், பிரபுவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படையினர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த பிரபுவின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
அப்போது அங்கு திரண்டு இருந்த அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். இதையடுத்து போலீசார், பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story