இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு: கரூர் கோர்ட்டில் முகிலன் ஆஜர்


இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு: கரூர் கோர்ட்டில் முகிலன் ஆஜர்
x
தினத்தந்தி 30 July 2019 4:45 AM IST (Updated: 30 July 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு தொடர்பாக கரூர் கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சமூக ஆர்வலர் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார்.

கரூர்,

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் முகிலன். கடந்த பிப்ரவரி முதல் சில மாதங்கள் காணாமல்போன இவர், திருப்பதி ரெயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். இதற்கிடையே முகிலனுடன் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட பெண் ஒருவர், தன்னை முகிலன் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கற்பழித்ததாக புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், முகிலனை கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் அருகே சீத்தப்பட்டி காலனியில் நடந்த ஒரு கூட்டத்தில், தமிழக அரசுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் முகிலன் பேசியதாக அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 1-ல் நடந்து வருகிறது.

கோர்ட்டில் ஆஜர்

இந்த வழக்கு தொடர்பாக ஆஜராக, திருச்சி மத்திய சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை கரூர் கோர்ட்டுக்கு முகிலன் அழைத்து வரப்பட்டார். அப்போது முகிலன் வேனில் இருந்து இறங்கியதும், ஹைட்ரோ கார்பன் வேண்டாம், மேகதாதுவில் அணை கட்டி காவிரியை அழிக்காதே... என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 1-ல் நீதிபதி விஜய் கார்த்திக் முன்பு முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கினை வருகிற 9-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் பின்னர் அங்கிருந்து வேன் மூலம் திருச்சி மத்திய சிறைக்கு முகிலன் அழைத்து செல்லப்பட்டார்.

எதிர்கொள்வோம்

முன்னதாக முகிலன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக உரிமையை டெல்லியில் அடமானம் வைத்து கொள்ளையடிக்கின்றனர். ஆனால் ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்காதே... காவிரியில் மணல் அள்ளாதே... என்று கூறியதற்காக என் மீது தேசதுரோக வழக்கு போடுகிறார்கள். எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்வோம்.

தமிழகத்தின் வாழ்வாதார உரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு பறித்து கொண்டிருக்கிறது, என்றார்.

Next Story