மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்


மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
x
தினத்தந்தி 30 July 2019 4:15 AM IST (Updated: 30 July 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதியை குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, பொதுமக்கள் மொத்தம் 471 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அவர் அந்த மனுக்களை உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான நபர் களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட உத்தரவிட்டார்.

கூட்டத்தில், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து, குமாரபாளையம் தாலுகா ஓலப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, அவரின் குடும்பத்தாருக்கு ரூ.3 லட்சத்திற்கான காசோலையினையும், ராசிபுரம் தாலுகா பெரப்பஞ்சோலை கிராமத்தை சேர்ந்த சந்திரன் என்பவர் கிணறு தூர்வாரும் போது, மண் சரிந்து உயிரிழந்தமையால் அவரின் குடும்பத்தாருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார்.

மேலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பேளுக்குறிச்சியை சேர்ந்த திவ்யா என்பவருக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்கான ஆணையினையும், உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் தற்காலிக ஓய்வூதியமாக ஜோதி என்பவருக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்கான ஆணையினையும் கலெக்டர் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.28 ஆயிரத்து 710 மதிப்பிலான விலையில்லா சலவைப்பெட்டிகளை கலெக்டர் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இலாஹிஜான் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story