இங்கிலாந்தில் கப்பல் சிறைபிடிப்பு: திருச்செங்கோடு என்ஜினீயர் தவிப்பு பத்திரமாக மீட்க குடும்பத்தினர் கோரிக்கை
இங்கிலாந்து ராணுவம் சிறைபிடித்துள்ள கப்பலில் இருந்து தனது மகனை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு திருச்செங்கோட்டை சேர்ந்த என்ஜினீயர் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செங்கோடு,
ஈரான் நாட்டில் இருந்து சிரியா நாட்டிற்கு கச்சா எண்ணெய் ஏற்றிச்சென்ற கப்பலை இங்கிலாந்து நாட்டின் ராயல் ராணுவம் ஜிப்ரால்டர் கடற்பகுதியில் கடந்த 4-ந் தேதி சிறைபிடித்தது. இந்த கப்பலில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த என்ஜினீயர் தவித்து வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் நவீன்குமார் (வயது 28). மரைன் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் சர்வதேச அளவில் பல்வேறு கப்பல்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். தற்போது இங்கிலாந்து ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ஈரான் எண்ணெய் கப்பலில் மூன்றாம் நிலை என்ஜினீயராக நவீன்குமார் பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து ராணுவத்தால் தங்களது கப்பல் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாகவும், கப்பலின் கேப்டனை மட்டுமே கைது செய்து அவர்கள் அழைத்து சென்றிருப்பதாகவும், தங்களிடம் தனித்தனியாக ராணுவத்தினர் விசாரணை நடத்தியதாகவும், இதனால் எந்தவிதமான இடையூறும் ஏற்படவில்லை எனவும், நவீன்குமார் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தங்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கப்பல் நிறுவனமும், இங்கிலாந்து ராணுவத்தினரும் செய்து வருவதாகவும், இந்திய தூதரக அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பலுக்கே நேரில் வந்து தங்களிடம் பேசியதுடன், விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து சென்றதாகவும் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள என்ஜினீயர் நவீன்குமாரின் குடும்பத்தினர் கூறியதாவது:-
கடந்த 3 ஆண்டுகளாக நவீன்குமார் கப்பலில் பணிபுரிந்து வருகிறார். இதுவரை எந்த பிரச்சினையிலும் சிக்கியது இல்லை. தற்போது அவர் பணிபுரியும் கப்பலை இங்கிலாந்து ராணுவம் சிறைபிடித்துள்ளது. எனவே அவரையும் அவருடன் உள்ள இந்தியர்கள் அனைவரையும் தமிழக அரசும், மத்திய அரசும் விரைவில் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கப்பலில் சிறைவைக்கப்பட்டுள்ள நவீன்குமார் உள்ளிட்ட இந்தியர்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து பேசியுள்ளது தங்களது குடும்பத்தினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் சென்னை பல்லாவரம் பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் பாலமுருகன் என்பவரது மகன் பாலாஜி (23). இவர் மரைன் என்ஜினீயரிங் படித்து விட்டு தற்போது இங்கிலாந்து ராணுவம் சிறைபிடித்துள்ள ஈரான் எண்ணைக் கப்பலில் பயிற்சி என்ஜினீயராக பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. இவரை மீட்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story