ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி கிராம கோவில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி கிராம கோவில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 July 2019 4:30 AM IST (Updated: 30 July 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில், கிராம கோவில் பூசாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில், கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் தஞ்சை, திருவாரூர், நாகை மண்டல அமைப்பாளர் பாவேந்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய அமைப்பாளர் சாமிநாதன், நாகை மாவட்ட இணை அமைப்பாளர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் ஒன்றிய அமைப்பாளர் கருணாகரன் வரவேற்றார்.

இலவச தொகுப்பு வீடுகள்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குவதாக அறிவித்த மாத ஊக்கத்தொகையை அனைத்து பூசாரிகளுக்கும் வழங்க வேண்டும். பூசாரிகளின் ஓய்வூதியத்திற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.72 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

நலத்திட்ட உதவிகளை உயர்த்தி உடனே வழங்க வேண்டும். கிராம கோவில் பூசாரிகளை பேரவையில் புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். ஓய்வூதிய தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

இலவச தொகுப்பு வீடுகளை பூசாரிகளுக்கும் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படும் போது அந்த கோவில்களில் பூஜை செய்யும் பூசாரி ஒருவரையும் இந்த குழுவில் சேர்த்து நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் ஞானசேகரன் நன்றி கூறினார்.

Next Story